Home > DISTRICT-NEWS, Nagapattinam > அயோடின் கலக்காத உப்பு விற்றால் கடும் நடவடிக்கை : உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை

அயோடின் கலக்காத உப்பு விற்றால் கடும் நடவடிக்கை : உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை

21,October, 2016

நாகை: நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அயோடின் என்பது மிக குறைந்த அளவே உலகில் கிடைக்கும் தனிமமாகும். இது மனித உடல் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. அயோடின் சத்து குறைபட்டால் கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படலாம். குழந்தை பிறந்து இறக்கும் நிலை ஏற்படலாம். குழந்தைகள் பிறவி குறைபாடுடன் பிறக்க நேரிடலாம். குழந்தைகளுக்கு மூளை பாதிப்பு, அங்கம் கோணல், அறிவு மந்தம், குறைந்த மதிநுட்பம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் வயது வந்த பெரியவர்களுக்கு ஆற்றல் குறைந்த செயல்பாடு, குறைந்த உழைப்புத்திறன், முன்கழுத்து கழலை ஏற்பட வாய்ப்புள்ளது. உலகில் உள்ள மக்கள் தொகையில் 40 சதவீத மக்கள் அயோடின் குறைபாடு பிரச்னையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதை போக்குவதற்காகத்தான் உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு இல்லாமல் அன்றாடம் குறைந்த அளவே பயன்படுத்தும் உப்பில் அயோடின் கலந்து விற்பனை செய்யப்படுகிறது.
இப்படிப்பட்ட அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவதால் கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான அறிவுத்திறன் உள்ள குழந்தைகளை பெற்றெடுக்க முடியும். அயோடின் கலந்த உப்பை வாங்கி உட்கொள்வதால் மட்டுமே அயோடின் பற்றாக்குறையிலிருந்து அனைவரையும் பாதுகாத்து கொள்ள முடியும்.  அயோடின் பற்றாக்குறை கோளாறு இல்லாதவர்கள் கூட தொடர்ந்து அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும். உணவில் அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவதால் உணவின் குணம், மனம் மாறும். காய்கறி, பால், இறைச்சி, மீன் தானிய வகைகள் போன்றவற்றில் அயோடின் சத்து இருந்தாலும், அதன் அளவு நம் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்யாது.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச்சட்டப்படி அயோடின் கலக்காத உப்பு விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. எனவே மனித உணவாக விற்பனை செய்யப்படும் உப்பு சரியான அளவு அயோடின் கலந்ததாகவே உணவு விற்பனையாளர்கள், மளிகைக்கடை, பெட்டிக்கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். முழுமையாக தயாரிப்பு விவரம் உள்ள அடைக்கப்பட்ட பாக்கெட்டுகளில் மட்டுமே உப்பு விற்பனை செய்ய வேண்டும். ஒவ்வொரு பாக்கெட்டிலும் உணவு பாதுகாப்புத்துறை வழங்கி உள்ள தயாரிப்பு உரிம எண் அச்சடிக்கப்பட்டுள்ளதா என்பதை கவனித்து பொதுமக்கள் உப்பு பாக்கெட்டுகளை வாங்க வேண்டும்.
நாகூர் மற்றும் நாகை பகுதிகளில் அயோடின் கலக்காத உப்பு விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலரை 9442214055 என்ற கைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இன்று சர்வதேச அயோடின் குறைபாடு நீக்கல் தினம் கடைபிடிக்கப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் ஆண்டு முழுவதும் அயோடின் கலந்த உப்பை பயன்படுத்தி பயன்பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

%d bloggers like this: