Home > DISTRICT-NEWS, Tirunelveli > உணவு பாதுகாப்பு சட்டம் அமல் ஓட்டல் உரிமையாளர்கள், நுகர்வோர் குழுக்கள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

உணவு பாதுகாப்பு சட்டம் அமல் ஓட்டல் உரிமையாளர்கள், நுகர்வோர் குழுக்கள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

24,November, 2016

நெல்லை,

உணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர்கள், நுகர்வோர் குழுக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், உணவு பாதுகாப்பு பிரிவு மூலம், மாவட்ட அளவில் செயல்படுத்தப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு சட்டம் தொடர்பாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள், நுகர்வோர் குழுக்களின் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கருணாகரன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

உணவு பாதுகாப்பு சட்டம்

நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு மூலம் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், நகர பஞ்சாயத்துகள் மற்றும் ஊரகப் பகுதிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்–2006ன்படி 05.08.2011 தேதி முதல் அமுல்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டு உள்ளதை கண்காணிக்க தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மூலம், உணவு பாதுகாப்பு துறை தொடங்கப்பட்டு, மாவட்ட அளவில் நியமன அலுவலரும், நகராட்சி மற்றும் அனைத்து வட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தர நிர்ணயம்

உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், உணவு தொழில் செய்பவர்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு, ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு கீழ் விற்பனை செய்பவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி, பதிவு செய்ய வேண்டும். ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு மேல் விற்பனை செய்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கட்டணத்தில் மாநில உரிமம் பெற வேண்டும். பெரிய தயாரிப்பாளர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் தொழில் புரிவோர்களுக்கு ரூ.7,500 கட்டணத்தில் மத்திய உரிமமும் வழங்கப்படுகிறது.

புதிய சட்டத்தின்படி உணவு சம்மந்தமான பலதுறைகள் மற்றும் பல நிலைகளில் இருந்த சட்ட ஒழுங்கு முறைகள், உரிமம் வழங்குதல் அனைத்தும் ஒரே சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. உணவு பொருட்களுக்கு அறிவியல் அடிப்படையிலான தரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய சட்டத்தின் படி, நுகர்வோர்களாகிய பொதுமக்களுக்கு உற்பத்தி செய்வது முதல் உணவு பொருட்களை வாங்கி உண்ணும் வரை பாதுகாப்பானது மற்றும் எவ்வித சுகாதார கேடு விளைவிக்காது என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது.

பகுப்பாய்வு கூடங்கள்

உணவு மாதிரி பரிசோதனை செய்வதற்கு நெல்லை உள்பட தமிழகம் முழுவதும் 6 இடங்களில் பகுப்பாய்வு கூடங்கள் உள்ளன. உரிமங்களுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து பெற்று கொள்ளலாம். நெல்லை மாவட்டத்தில் உள்ள உணவு பொருட்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பதிவு மற்றும் உரிமங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

பொதுமக்களும், நுகர்வோரும் மிகுந்த பயனுள்ள உணவு பாதுகாப்பு சட்டத்தை அனைவரும் கடைபிடித்து அரசின் சுகாதார நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கருணாகரன் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராம்கணேஷ், நகர பஞ்சாயத்துகளின் மண்டல உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர், பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் கல்யாணசுந்தரம், மாநகர நல அலுவலர் பொற்செல்வன் மற்றும் அலுவலர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், சங்க பிரதிநிதிகள், நுகர்வோர் பாதுகாப்புக் குழு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Categories: DISTRICT-NEWS, Tirunelveli
%d bloggers like this: