Home > DISTRICT-NEWS, Sivaganga > இனி உரிமம் பெற்ற பிறகே அன்னதானம் செய்யனுமாம் – ஆட்சியர் அறிவிப்பு

இனி உரிமம் பெற்ற பிறகே அன்னதானம் செய்யனுமாம் – ஆட்சியர் அறிவிப்பு

28,April, 2017

சிவகங்கையில், உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் இனி உரிமம் பெற்ற பிறகே அன்னதானம் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மலர்விழி அதிரடி அறிவிப்பி வெளியிட்டுள்ளார்.

உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் உணவு வணிகர்கள் மட்டுமின்றி அன்னதானம் செய்பவர்களும் உரிமம் பெற வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், அவர் கூறியிருப்பது:

“சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உணவு விடுதிகள், மளிகை கடைகள், அடுமனை கடைகள், இறைச்சிக் கடைகள், தேநீர்க் கடைகள், பால் வர்த்தகர்கள், சாலையோர உணவு வர்த்தகர்கள், உணவு பொருட்களின் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் போன்ற உணவு வணிகர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின்கீழ் உரிமம் பெற வேண்டும்.

மேலும், வணிகர்கள் மட்டுமின்றி, மாவட்டத்தில் நடைபெறும் அன்னதானத்திற்கும் உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் உரிமம் பெறுவது அவசியம்.

இந்த உரிமத்தினை பெற விரும்புவோர் http://www.fssai.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அதனை நகல் எடுத்து அதில் தங்களது கையொப்பமிட்டு இணையத்தளத்தில் விண்ணப்பித்த 15 நாள்களுக்குள் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெறுவதற்கு உணவு பாதுகாப்பு துறையை மட்டுமே அணுக வேண்டும். இடைத்தரகர்கள் என்று கூறிக்கொள்ளும் எந்த நபர்களையும் உணவு வணிகர்கள் நம்பி ஏமாந்துவிட வேண்டாம்.

உணவு பாதுகாப்புத் துறையின் பதிவுச் சான்றிதழுக்கு தகுதி வாய்ந்த உணவு வணிகர்கள் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட பொது இ–சேவை மையங்களில் விண்ணப்பித்து பதிவு சான்றிதழ் பெறலாம்.

மேலும், உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள விதிமுறைகளை பின்பற்றிட வேண்டும் என்றும், உரிமம் பெறுவதற்கு வழங்கப்பட்ட காலநீட்டிப்பு முடிந்துவிட்டதால் விரைவில் உணவு பாதுகாப்பு உரிமம் எடுக்க வேண்டும்.

உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் குறித்த தங்களது சந்தேகங்கள் கேட்க மற்றும் புகார்கள் ஏதேனும் தெரிவிக்க மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இதேபோல இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையரகம் அல்லது தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம்.

எனவே, நுகர்வோர்களும், உணவு வணிகர்களும் மேற்கூறிய வசதியினைப் பயன்படுத்தி பாதுகாப்பான உணவை வழங்குவதை உறுதி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று அதில் கூறியிருந்தார்.

Categories: DISTRICT-NEWS, Sivaganga
%d bloggers like this: