Home > DISTRICT-NEWS, Salem > கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஓட்டலில் வாங்கிய தயிர் சாதத்தில் வண்டு கிடந்ததால் பரபரப்பு

கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஓட்டலில் வாங்கிய தயிர் சாதத்தில் வண்டு கிடந்ததால் பரபரப்பு

11,May, 2017

சேலம்,மே.9
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் உணவு சாப்பிட்டு செல்கின்றனர். இந்தநிலையில் மாவட்ட சுகாதாரத் துறையில் பணிபுரிந்து வரும் செல்வராஜ் என்பவர் மதிய உணவுக்காக அந்த ஓட்டலில் தயிர் சாதத்தை வாங்கினார்.
பின்னர் அலுவலகத்திற்குள் சென்று செல்வராஜ் தயிர் சாதத்தை சாப்பிட தொடங்கியபோது கசப்பாக இருப்பதை உணர்ந்தார். அப்போது தான் தயிர் சாதத்தில் கிடந்த வண்டை அவர் கடித்தது தெரியவந்தது. இதனால் செல்வராஜ் அதிர்ச்சி அடைந்ததார். பின்னர் அவருக்கு வாந்தியும், தலை சுற்றலும் ஏற்பட்டது. இதுகுறித்து செல்வராஜ் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதாவிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக அந்த ஓட்டலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் இருப்பதும், பணியாளர்கள் பாதுகாப்பு உடை அணியாமலும், ஓட்டலில் போதிய வெளிச்சம் இல்லாமலும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அத்தகைய உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இந்த ஓட்டல் மீது 3–வது முறையாக புகார் வந்துள்ளது. பின்னர் ஓட்டல் உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டதுடன், அதற்கு 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. சரியான விளக்கம் அளிக்கவில்லையென்றால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா கூறினார்.

Categories: DISTRICT-NEWS, Salem
%d bloggers like this: