Home > NEWS > சாலையோரம் செயல்படும் இறைச்சி கடைகள் ஆர்டிஓ நடவடிக்கையை கண்டு கொள்ளாத ஆக்ரமிப்பாளர்கள்

சாலையோரம் செயல்படும் இறைச்சி கடைகள் ஆர்டிஓ நடவடிக்கையை கண்டு கொள்ளாத ஆக்ரமிப்பாளர்கள்

11,May, 2017

நாகர்கோவிலில் ஆக்ரமிப்புகள் அகற்றம் என்பது வெறும் கண்துடைப்பு என்பதால், நாகர்கோவில் பஸ் நிலையங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் உள்பட அனைத்து பகுதிகளில் ஆக்ரமிப்பு அகற்றிய அன்றைய தினம் மாலையே மீண்டும் அதே நபர்கள், அதே இடத்தை ஆக்ரமித்து விடுகின்றனர். இதற்கு சில கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் உறுதுணையாக உள்ளனர். இந்நிலையில் நாகர்கோவில் டென்னிசன் சாலையில் உள்ள

காலிமனை பகுதியில் தினமும் கேரள இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவது குறித்தும், வடசேரி பஸ்நிலையத்திலிருந்து டிஸ்லெரி சாலை செல்லும்  வழியில் நகராட்சி வாகன காப்பகத்தை ஒட்டி ஆக்கிரமிப்பு இறைச்சிக் கடைகள் செயல்படுவது குறித்தும், இதற்கு நகராட்சி வாகன காப்பகத்திலிருந்தே மின்சாரம் வழங்குவது பற்றியும், நகராட்சி வணிக வளாகமான பெதஸ்தா வணிக வளாகத்தின் முன்புறமும் ஆக்கிரமிப்பு இறைச்சிக் கடைகள் செயல்படுவது பற்றியும், இதனால் சுகாதார சீர்கேடு, துர்நாற்றம்  ஏற்படுவது பற்றியும் செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து நாகர்கோவில் ஆர்.டி.ஓ ராஜ்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், நகராட்சி மற்றும் போலீசார் இணைந்து இருமுறை சோதனை நடத்தி இறைச்சிக்கடைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. சனிக்கிழமை மற்றும் ஞாயிறு கிழமைகளிலும், பண்டிகை நாட்களில் இந்த ஆக்கிரமிப்பு இறைச்சிக் கடைகள் செயல்படும். இவ்வாறு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வடசேரி பஸ் நிலையம் மற்றும் நகராட்சி பெதஸ்தா வணிக வளாகம் முன்பு அரசு நிலத்தை ஆக்ரமித்து இறைச்சிக் கடைகள் நடத்தி வந்தனர். அப்போது  சோதனை நடத்திய ஆர்டிஓ தலைமையிலான அதிகாரிகள் அங்கிருந்த 6 தள்ளுவண்டிகள் மற்றும் மேஜைகளை கைப்பற்றினர். இதனால் இந்த இடத்தில் மீண்டும் ஆக்ரமிப்புகள் நடக்காது என்ற நிலை உருவானது.
இந்நிலையில் ஆர்டிஓ ராஜ்குமார் இடமாற்றம் என செய்தி வந்தது. இதையடுத்து பெதஸ்தா வணிக வளாகம் மற்றும் வடசேரி பஸ் நிலையம் அருகே மீண்டும் மேஜைகளை போட்டு திறந்த வெளியில் இறைச்சிக் கடைகள் செயல்பட தொடங்கி விட்டன. நாகர்கோவிலில் இறைச்சிக்கடை ஆக்ரமிப்புகள் அகற்ற முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், இறைச்சி கடைகள் நடத்துவது, கறிக்காக ஆடு, மாடு பன்றிகளை வெட்டுவதற்கும் என விதிமுறைகள் உள்ளன விதிமுறைக்கு உள்பட்டு இறைச்சி கடைகள் நடத்தினால் சுகாதாரம் காக்கப்படும். ஆனால் ஆக்கிரமிப்பு இடத்தில் நடத்தப்படும் இறைச்சி கடைகள் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. திறந்த வெளியில் பன்றிகளை வெட்டுகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இவர்கள் உணவு பாதுகாப்புத்துறை விதிமுறைப்படி கடைக்குள் வைத்து இறைச்சி விற்பனை செய்தால் இந்த அவஸ்தை இல்லை. எனவே ஆக்ரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் ஒருமுறை ஆக்ரமிப்புகளை அகற்றியபின் மீண்டும் ஆக்ரமிப்பு செய்ய முடியாதபடி, கைது உள்ளிட்ட  உறுதியான நடவடிக்கைகளை போலீசார் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Categories: NEWS
%d bloggers like this: