Home > NEWS > சாயனம் கலப்பு எதிரொலி: பால் உள்பட அனைத்து வகை உணவு பொருளையும் சோதனை செய்ய வேண்டும்

சாயனம் கலப்பு எதிரொலி: பால் உள்பட அனைத்து வகை உணவு பொருளையும் சோதனை செய்ய வேண்டும்

30,May, 2017

சென்னை,

தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டி வருமாறு:–

முதல்–அமைச்சருடன் ஆலோசனை

முதல்–அமைச்சரை நான் சென்று சந்தித்து, இதுவரை நடந்த சம்பவங்கள் பற்றி எடுத்துரைத்தேன். அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, தலைமைச் செயலாளர், உணவு பாதுகாப்பு ஆணையர் மற்றும் அதிகாரிகளை அழைத்து ஆலோசித்தார்.

அடுத்து என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை எங்களிடம் அவர் சொல்லியிருக்கிறார். பாலில் கலப்படம் செய்வது மிகப்பெரிய குற்றம், இதில் நமது அரசு பின்வாங்கக்கூடாது, இந்த வி‌ஷயத்தில் வேகமாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அவரது அறிவுரையை ஏற்று பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறேன்.

முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் உத்தரவுப்படி பால் மற்றும் அனைத்து உணவு பொருட்கள் மீதான சோதனை தொடரும். குறிப்பாக, ஆவின் உள்பட அனைத்து வகை பால்களையும் கடுமையாக சோதனையிட அவர் உத்தரவிட்டிருக்கிறார். ஆவின் பாலையும் பரிசோதனைக்கு கொடுக்கும்படி நானும் உத்தரவிட்டிருக்கிறேன்.

மனிதனை கொல்லும் வி‌ஷம்

பால் கலப்படம் தொடர்பாக நாங்கள் எடுத்த முடிவுகள் வந்துள்ளன. அதில், தனியார் பாலில் பார்மால்கிஹைட், ஹைட்ரஜன் பெர் ஆக்சைடு, யூரியா, காஸ்டிக் சோடா போன்ற வேதிப்பொருட்களோடு, கிழங்கு மாவும் கலக்கப்பட்டு இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.

கொஞ்ச கொஞ்சமாக மனிதனை கொல்லும் வி‌ஷம் அவை. இந்த வேதிப்பொருட்கள் சென்னை, கோவை, பெருந்துறை, மதுரை, திருச்சி போன்ற இடங்களில் பிளாக்கில் விற்பனை செய்கின்றனர். இவற்றை தற்போது தனியார் கம்பெனிகளில் வாங்குவதை நிறுத்திவிட்டனர்.

உடல்நல கோளாறுகள்

அனைத்து தனியார் பால் நிறுவனங்கள் மீதும் நான் கலப்பட குற்றச்சாட்டை வைக்கவில்லை. சில நிறுவனங்களில் கலப்படம் இல்லை என்றாலும் பாலின் தரம் குறைவாக உள்ளது. தனியார் பாலில் கலப்படம் இருக்கிறது என்பது 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 அல்லது 4 ஆண்டுகள் தொடர்ந்து அந்த பாலை குடித்தால், இருதயம், சிறுநீரக, ஈரல் நோய்கள், அல்சர், கேன்சர் மற்றும் குடலில் பாதிப்புகள் வரும்.

இப்போது இருதய நோய்கள் வாலிபர்களுக்கு மிகவும் சாதாரணமாக வருகிறது. இதுபற்றி டாக்டர்களிடம் கேட்டபோது, வேதிப்பொருள் கலந்துள்ள உணவு பொருட்களை சாப்பிடுவதால் இந்த கோளாறுகள் வருவதாக கூறினார்.

நடவடிக்கைகள்

பாலில் தண்ணீர் கலந்திருந்தால் அதற்கேற்ற நடவடிக்கை, யூரியா, காஸ்டிக் சோடா கலந்திருந்தால் அதுசம்பந்தமான நடவடிக்கை என தனித்தனியாக நடவடிக்கை எடுப்போம். அந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உரிமம் ரத்தாகும், கம்பெனி மூடப்படும், வழக்கு தாக்கல் செய்யப்படும், கைது நடவடிக்கையும் எடுக்கப்படும்.

தனியார் நிறுவனங்கள் 70 உள்ளன. அவை எல்லாவற்றையும் நான் சொல்லவில்லை. இதில் பாதி நிறுவனங்கள் ஒழுக்கமாக செயல்படுகின்றன. சந்தேகத்துக்கு உரிய 20 நிறுவன பால் சோதனை நடக்கின்றது. இதுவரை 2 கம்பெனிகளின் ரிசல்ட் வந்துள்ளது.

சைலண்ட் கொலை

இதுவரை உடல் நிலை பாதிப்பு அறிக்கை எதுவும் வந்திருக்கிறதா என்று கேட்டால், கலப்படத்தை ஒரு சைலண்ட் கொலை என்றுதான் கூறமுடியும். கொஞ்சம் கொஞ்சமாக ஆளைக் கொல்லும் கலப்படம் இது. புனே சோதனை மையத்துக்கு பாலை அனுப்பி வைத்திருக்கிறோம்.

இது எப்போது வரும் என்று வெளிப்படையாக சொல்ல முடியாது. எங்கெங்கு சோதனைக்கு அனுப்பி இருக்கிறோம் என்பதை சொன்னோம் என்றால் ரிசல்டை மாற்றிவிடுவார்கள்.

பால் நிறுவனங்களை மிரட்டுவதாக அரசியல் ரீதியாக கூறினாலும், யாராவது ஒருவர் உண்மையை சொல்ல வேண்டுமே. கலப்படம் எப்படியாவது தடுக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம். எந்த கம்பெனியையும் பழிவாங்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை.

தனியார் பால் கம்பெனிகள் மீது கலப்பட குற்றச்சாட்டை வைத்த பிறகு ஆவின் பால் விற்பனை கூடியிருக்கிறது. தனியார் பால் விற்பனை குறைந்திருப்பதாக எனக்கு தகவல் கூறியுள்ளனர்.

மடியில் கனமில்லை

ஆவினில் 4 வகை பால் பாக்கெட் போடுகிறோம். ஆவினில் தவறு நடந்தால் அதன் அதிகாரியையும் நான் கண்டிப்பேன். பால் உற்பத்தியாளர், முகவர் தவறு செய்தாலும் ஆவினுக்குத்தான் கெட்ட பெயர் வரும் என்பதால் உன்னிப்பாக கவனிக்கும்படி கூறியிருக்கிறேன். எங்களுக்கு மடியின் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை.  இவ்வாறு அவர் கூறினார்.


Categories: NEWS
%d bloggers like this: