Home > NEWS > சில தனியார் பாலில் கலப்படம் ஆய்வில் உறுதி என அமைச்சர் தகவல்

சில தனியார் பாலில் கலப்படம் ஆய்வில் உறுதி என அமைச்சர் தகவல்

30,May, 2017

”பாலில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்,” என, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

அமைச்சர் கூறியதாவது:
ஆய்வில் கிடைத்த தகவல் அடிப்படையில், பாலில் கலப்படம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். இது தொடர்பாக, முதல்வரை சந்தித்து பேசினேன். அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் அறிவுரை வழங்கினார். தலைமை செயலர், உணவு பாதுகாப்பு கமிஷனர் உட்பட, அதிகாரிகளை அழைத்து பேசினார்.’பாலில் கலப்படம் செய்வது, மிகப்பெரிய குற்றம். இதில், அரசு பின்வாங்கக் கூடாது; வேகமாக செயல்பட வேண்டும்’ என, அறிவுரை வழங்கினார்.

இதயம் சம்பந்தப்பட்ட நோய்

தனியார் பால் நிறுவனங்களின் மாதிரிகள், வெளிமாநில ஆய்வகங்களுக்கு, சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன; சில முடிவுகள் வந்துள்ளன. சில பாலில், ‘பார்மாலிடின் பெராக்சைடு, ஹைட்ரஜன் பெராக்சைடு, காஸ்டிக் சோடா’ மற்றும் கிழங்கு மாவு போன்றவை கலக்கப்பட்டு உள்ளன.இதனால், இதயம் சம்பந்தப்பட்ட நோய் பரவ

வாய்ப்புள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக, உயிரை குடிக்கக் கூடிய அமிலங்கள் இவை. எங்கள் நோக்கம் பழிவாங்குவது அல்ல. சில நிறுவனங்களின் பால் தரம் குறைவாக உள்ளது. ரசாயனம் கலக்கவில்லை என, முடிவு வந்துள்ளது.

கடும் நடவடிக்கை

பாலில் கலப்படம் செய்வோர் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விருப்பு வெறுப்பின்றி முடிவு எடுக்க, முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். தற்போது, 70 நிறுவனங்கள் உள்ளன. அனைத்தும் தவறு செய்வதாகக் கூறவில்லை.
சில நிறுவனங்கள், முறையாக செயல்படுகின்றன.தவறு செய்யும் நிறுவனங்கள், இனி தமிழகத்தில் செயல்பட முடியாது. அரசின் ஆவின் நிறுவனத்தில் தவறு நடந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, இரண்டு சோதனை முடிவுகள் வந்துள்ளன.
எங்கெங்கு சோதனைக்கு அனுப்பி உள்ளோம் என்ற விபரத்தை தெரிவித்தால், ‘ரிசல்ட்’ மாறி வந்துவிடும். கலப்படம் செய்வோருக்கு தமிழகத்தில் இடமில்லை. பால் வியாபாரத்தை அதிகப்படுத்த, ரசாயனம் கலப்பதை அனுமதிக்க மாட்டோம்.
ஆவின் பால் விற்பனை சற்று கூடியுள்ளது. ஆவின் பாலை சோதனை செய்ததில், கலப்படம் இல்லை என, முடிவுவந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

ஏதோ எதிர்பார்க்கிறாரு அமைச்சர்’

”பாலில் கலப்படம் செய்யும் தனியார் றுவனங்களின் பெயரை அமைச்சர் வெளியிட வேண்டும்; இல்லையென்றால், ஏதோ எதிர்பார்ப்பில் கூறியிருப்பதாக சந்தேகம் எழும்,”

என, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொதுச் செயலர், முகமது அலி கூறினார்.
இது குறித்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது:பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் நிறுவனம் விற்கும் பாலில், ரசாயன கலப்படம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
பாலில் கலப்படம் செய்வதற்கு, தமிழக அரசும், ஆவின் நிறுவனமும் தான் காரணம். ஆவின் நிறுவனம் பால் கொள்முதலை அதிகப்படுத்தி இருந்தால், பாலில் கலப்படம் செய்வதை தடுத்திருக்க முடியும்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு, தனியார் பால் நிறுவனங்களிடம், ஏதோ எதிர்பார்ப்பில் கூறியிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. அந்த நிறுவனங்களின் பெயரை அமைச்சர் அறிவிக்க வேண்டும். 2004 முதல், 2014 வரை, ஆவின் நிறுவனத்திற்கு பால் சப்ளை செய்த லாரிகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கி வந்த வைத்தியநாதன் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த வழக்கை விரைவாக நடத்தி, தண்டனை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Categories: NEWS
%d bloggers like this: