Home > NEWS > தமிழ்நாட்டில் இருந்து ஆய்வுக்கு பால் வரவில்லை- புனே பரிசோதனை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இருந்து ஆய்வுக்கு பால் வரவில்லை- புனே பரிசோதனை மையம் அறிவிப்பு

30,May, 2017

தமிழ்நாட்டில் இருந்து சமீபத்தில் பால் எதுவும் ஆய்வுக்கு வரவில்லை என்று புனே தேசிய உணவு பரிசோதனை கூட டைரக்டர் பட்கரே கூறி உள்ளார்.

புனே:
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டில் விற்கப்படும் தனியார் பால்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன கலப்படம் உள்ளது என்று குற்றம் சாட்டினார்.
அத்துடன் தனியார் பால் மாதிரியை புனேவில் உள்ள தேசிய உணவு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும், அதில் தவறு கண்டு பிடிக்கப்பட்டால் பால் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜேந்திர பாலாஜி கூறி இருந்தார்.
ஆனால், தமிழ்நாட்டில் இருந்து சமீபத்தில் பால் எதுவும் ஆய்வுக்கு வரவில்லை என்று புனே தேசிய உணவு பரிசோதனை கூட டைரக்டர் பட்கரே கூறி உள்ளார்.
இது சம்பந்தமாக அவர் மேலும் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவன பால் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதில் கொழுப்பு சத்து எவ்வளவு அடங்கி இருக்கிறது என்பது பற்றி கண்டறிய ஆய்வுக்காக அனுப்பி இருந்தார்கள்.
அந்த பாலில் எந்த வி‌ஷத்தன்மை கொண்ட ரசாயனமும் கலந்திருக்கவில்லை என்று எங்கள் ஆய்வில் தெரிய வந்தது. அதன் பிறகு இதுவரை எந்த பாலும் தமிழ்நாட்டில் இருந்து ஆய்வுக்கு அனுப்பப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் புனேவுக்கு ஆய்வுக்காக பால் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறியுள்ள நிலையில், அந்த நிறுவனம் அப்படி பால் எதுவும் வரவில்லை என்று கூறி இருப்பது முரண்பாடான தகவலாக உள்ளது.
தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, சமீப காலங்களில் பாலில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் எந்த பாலிலும் வி‌ஷத்தன்மை உள்ள ரசாயனம் கலந்தது கண்டுபிடிக்கப்படவில்லை. 2 பால்களில் தண்ணீர் மட்டும் டிடர்ஜென்ட் (சோப்பு ரசாயனம்) கலந்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது என்று கூறினார்கள்.

Categories: NEWS