Home > Cuddalore, DISTRICT-NEWS > உணவகங்கள் உரிமம் பெறுவது அவசியம்: உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்

உணவகங்கள் உரிமம் பெறுவது அவசியம்: உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்

4,June, 2017

உணவகங்கள் உரிமம் பெறுவது அவசியம் என கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஆர்.வி.ரவி கூறினார்.
சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசு உணவுப் பாதுகாப்புத் துறை, சிதம்பரம் ஹோட்டல் சங்கம் இணைந்து, உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டத்தை சனிக்கிழமை நடத்தின. கூட்டத்தில், உணவுப் பாதுகாப்பு, மருந்து நிர்வாகத் துறை மாவட்ட நியமன அலுவலர் ஆர்.வி.ரவி பங்கேற்று, உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்துப் பேசினார்.
அவர் மேலும் கூறியதாவது: உணவகங்களில் உள்ள சமையல் அறை, உணவு பரிமாறும் இடம், உணவுப் பொருள்கள் இருப்பு அறை ஆகியவை உணவுப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி அமைக்கப்பட வேண்டும்.
உணவு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருள்களான அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் காய்கறிகள் தரமானதாக இருக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.
உணவில் அஜினமோட்டா சேர்ப்பது தீங்கு ஏற்படுத்தும் என்பதால் அதனை பயன்படுத்தக்கூடாது. வாழை இலைகளில் உணவு பரிமாறப்பட வேண்டும்.
இதற்குப் பதிலாக பிளாஸ்டிக் தாள்களின் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். ஹோட்டல்கள், டிபன் சென்டர்கள், மெஸ், துரித உணவகங்கள், சாலையோர உணவகங்கள், தள்ளுவண்டிகள் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என்றார்.
கூட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை ஆய்வாளர்கள் ஜே.பத்மநாபன் (சிதம்பரம்), அருண்மொழி, குணசேகரன் ஆகியோர் பங்கேற்று, உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள், உணவுப் பாதுகாப்பு சட்டம் குறித்து விளக்கிப் பேசினர்.
வர்த்தகர் சங்கத் தலைவர் சதீஷ்குமார், செயலர் சி.முரளிதரன், முன்னாள் தலைவர் மூசா, ஹோட்டல் சங்க நிர்வாகிகள் மோகன், பேக்கரி உரிமையாளர் சங்க நிர்வாகி கணேஷ் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS
%d bloggers like this: