Home > DISTRICT-NEWS, Madurai > மேலூரில் தர பரிசோதனை முகாம்: 7 பால் மாதிரிகள் தரமற்றவை என கண்டுபிடிப்பு

மேலூரில் தர பரிசோதனை முகாம்: 7 பால் மாதிரிகள் தரமற்றவை என கண்டுபிடிப்பு

12,June, 2017

மேலூர்:
தமிழகத்தில் தனியார் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார் கூறினார்.
இதையடுத்து மதுரை மாவட்டத்தில் பாலின்தரம் குறித்து அறிய பரிசோதனை முகாமை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார். இந்த முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
மதுரையை அடுத்த மேலூர் பேங்க் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று பாலின் தரம் அறிவதற்கான சோதனை முகாம் நடந்தது.
இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் பாலின் மாதிரியை தர பரிசோதனைக்கு கொண்டு வந்தனர். கடைக்காரர்களும் பால் பாக்கெட்டுகளை கொண்டு வந்திருந்தனர். அவை ஆய்வு செய்யப்பட்டது.

பொதுமக்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த பாலை ஆய்வு செய்தபோது அதில் 7 பால்மாதிரிகள் தரமற்றவை என கண்டு பிடிக்கப்பட்டது. பாலில் குறைந்த கொழுப்பும், அதிக அளவில் நீரும் சேர்க்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி அம்சத்கான் கூறுகையில், தர பரிசோதனை முகாமில் 7 பால் மாதிரிகள் தர மற்றவை என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவைகள் மேல் ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்படும். அதன் அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக மேலூர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாலின் தரத்தை எவ்வாறு கண்டறிவது என விளக்கம் அளிக்கப்பட்டது.

Categories: DISTRICT-NEWS, Madurai
%d bloggers like this: