Home > DISTRICT-NEWS, Vellore > உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்: ஓட்டல் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்

உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்: ஓட்டல் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்

15,June, 2017

ஓட்டல்கள், பேக்கரி, இனிப்பகங்களில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தரம் குறைந்த, காலாவதியான உணவுப் பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவுப்பொருள் பாதுகாப்புத்துறையின் நியமன அலுவலர் டாக்டர் வெங்கடேசன் அறிவுறுத்தினார்.
குடியாத்தத்தில் நகர அனைத்து ஓட்டல்கள், ஸ்வீட் ஸ்டால்கள், பேக்கரி உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து டாக்டர் வெங்கடேசன் பேசியதாவது:
ஓட்டல்களில் உணவுப் பொருள்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். உணவுப் பொருள்களை பேப்பர், பிளாஸ்டிக் கவர்களில் பார்சல் செய்து கொடுக்கக் கூடாது. உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தரம் குறைந்த, காலாவதியான உணவுப் பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ஓட்டல், ஸ்வீட் ஸ்டால், பேக்கரிகளும் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமத்தை அவசியம் பெற வேண்டும். குடியாத்தம் நகரில் தொடர்ந்து உணவுக் கூடங்களில் ஆய்வுகள் நடத்தப்படும் என்றார் அவர்.
கூட்டத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் குடியாத்தம் முனியராஜ், ஆம்பூர் ஆரோக்கிய பாபு, திருப்பத்தூர் கந்தவேல், அரக்கோணம் தேவராஜ், வேலூர் கௌரிசுந்தர், கொளஞ்சி, காட்பாடி ரவிச்சந்திரன் ஆகியோர் ஓட்டல் உரிமையாளர்களுடன் கலந்துரையாடினர். குடியாத்தம் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்வர்பாஷா, நிர்வாகிகள் நவீன்சங்கர், தாமோதரன், குமார், சாய்சங்கர், சுரேஷ், விவேகானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ரூ. 9 ஆயிரம் மதிப்புள்ள போதைபாக்கு, புகையிலை பொருள்கள், தரமற்ற 7 கிலோ கோழி இறைச்சி, 5 கிலோ அரிசி ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

Categories: DISTRICT-NEWS, Vellore
%d bloggers like this: