Home > DISTRICT-NEWS, Tiruppur > உணவு பொருள் விற்பனையாளருக்கு இனி… உரிமம் கட்டாயம்! விண்ணப்பிக்கும் வழிமுறையும் அறிவிப்பு

உணவு பொருள் விற்பனையாளருக்கு இனி… உரிமம் கட்டாயம்! விண்ணப்பிக்கும் வழிமுறையும் அறிவிப்பு

23,June, 2017

உணவு பொருள் விற்பனையாளர்கள் பதிவு செய்து, சான்று பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது; உரிய கட்டணத்துடன் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் உரிமம் பெற வேண்டும் என்று, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதற்கான வழிமுறைகளும், அறிவிக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு கலப்படம் இல்லாத, பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டம், 2006 மற்றும், 2011 விதிகள், நடைமுறையில் உள்ளன. இது, சில திருத்தங்களுடன், புதிய சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, உரிமம் மற்றும் பதிவு பெறுவது கட்டாயமாக்கப்

பட்டுள்ளது.

ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் செய்வோர், 100 ரூபாய் செலுத்தி, http://www.foodlicensing.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு போட்டோ, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு ஆவணத்தையும், உறுதிமொழி படிவத்துடன், உணவு பாதுகாப்பு அலுவலரிடம், நேரில் அல்லது தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு ‘இ-சேவை’ மையங்களிலும் பதிவேற்றம் செய்யலாம். உணவு தயாரிப்பாளராக இருந்தால், பணியாளர் மருத்துவச்சான்று, வியாபார ஆதாரங்களை இணைக்க வேண்டும்.

ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்பவர், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். சில்லறை விற்பனையாளராக இருந்தால், 2,000 ரூபாயும்; ஒரு நாளில், ஒரு டன்னுக்கும் குறைவான உற்பத்தி செய்பவர் எனில், 3,000 ரூபாயும்; அதிக அளவு உற்பத்தி செய்தால், 5,000 ரூபாயும் செலுத்த வேண்டும்.

வங்கி கணக்கில் செலுத்தி, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அதன் அசல் மற்றும் நகல்களுடன், மாவட்ட நியமன அலுவலரிடம் நேரிலோ, தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

தயாரிப்பாளர் மட்டும், தயாரிப்பு கூடத்தில் வரைபடம், கட்டட தீர்வை ரசீது அல்லது வாடகை ஒப்பந்த பத்திரம், உள்ளாட்சி அமைப்பில் பெற்ற தடையில்லா சான்று, மருத்துவ சான்று, பங்குதாரராக இருந்தால் அதற்கான ஒப்பந்தம், அடையாள அட்டை நகல் இணைக்க வேண்டும். ஏற்கனவே பதிவு மற்றும் உரிமம் பெற்றவர்கள், தங்களது பதிவு, உரிமம் காலாவதியாகவதற்கு முன், 30 நாட்களுக்கு முன்பாக புதுப்பித்துக்கொள்ளலாம்.

காலதாமதம் ஏற்பட்டால், அபராதத்தொகை செலுத்தினால் மட்டுமே, அதே பதிவு எண்ணை பெறமுடியும். எனவே, உணவு பொருள் விற்பனையாளர்கள், உரிய நேரத்திற்குள் உரிமம் பெற வேண்டும் என்று, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புகார் தெரிவிக்க எண்கள்

தரமற்ற உணவு பொருள் விற்பனை செய்வது தொடர்பாக, ‘வாட்ஸ் ஆப்’ மூலமாகவும், உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்திலும் புகார் செய்யலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, உணவு பாதுகாப்புத்துறை மூலம், 290 உணவு மாதிரி எடுத்து, குற்றம் செய்த, 94 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தண்டனை மற்றும் அபராதமாக, 7.07 லட்சம் ரூபாய் பெற்று, அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா போன்ற புகையில பொருட்கள் ஆய்வில், 4,750 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

இறந்த கோழிகளை விற்கும் கும்பலை கண்டறிந்து, 1,500 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்

பட்டுள்ளது.

போலி டீத்துாள் விற்பனையாளரிடம் இருந்து, 500 கிலோ டீத்துாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அங்கன்வாடி, சத்துணவு மையங்களில், உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தனிப்படை ஆய்வின் மூலம், பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேசரி பருப்பு, 2.5டன் பறிமுதல் செய்யப்பட்டள்ளது.

எண்ணெய் நிறுவனங்களில் நடந்த ஆய்வில், தரம் குறைவாக இருந்த 1,000 லிட்டர் நல்லெண்ணெயும், 600 கிலோ கடலை எண்ணெயும் பறிமுதல் செசய்யப்பட்டுள்ளது.

உணவு பொருள் கலப்படம் மற்றும் தரம் குறைபாடு குறித்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்யலாம். தரமில்லாத உணவு பொருள் விற்பனை தொடர்பாக, 94440-42322 என்ற ‘வாட்ஸ் ஆப்’ எண்ணில் புகார்களை பதிவு செய்யலாம்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தை, 0421-2971190 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories: DISTRICT-NEWS, Tiruppur
%d bloggers like this: