Home > DISTRICT-NEWS, Tiruppur > உணவு பாதுகாப்பு குறித்து வர்த்தகர்களுக்கு விளக்கம்

உணவு பாதுகாப்பு குறித்து வர்த்தகர்களுக்கு விளக்கம்

3,July, 2017

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் நியமன அலுவலர் தாராபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் ஆய்வு நடத்தி வர்த்தக நிறுவன உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் ஆணையர் உத்தரவின் பேரில் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாவட்ட உணவு பாதுகாப்புதுறையின் நியமன அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் தாராபுரத்தில் திடீர் ஆய்வு நடத்தினார்.
தொடர்ந்து பால் குளிரூட்டும் நிலையம், பால் சேகரிக்கும் பல்வேறு மையங்கள், முகவர்கள் மற்றும் ஊழியர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்  நடந்தது. இதில் கலந்து கொண்டு டாக்டர் தமிழ்செல்வன் பேசியதாவது: பால் சேகரிக்கம் மையங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சோப்பு தண்ணீரில் நன்கு கழுவி பின் சுடு நீர் விட்டு கழுவி காய வைக்கவேண்டும். பால் சேகரித்த இரண்டு மணி நேரத்திற்குள் குளிரூட்டும் நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
எவர் சில்வர், அலுமினியத்தினால் ஆன பால் கேன்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். பால் கறக்கும் விவசாயிகளுக்கு எந்தவித தொற்று நோய் இருக்ககூடாது. பால் குளிரூட்டும் நிலையங்களில் தகுதிவாய்ந்த பரிசோதகர்கள் ஆய்வு செய்யவேண்டும் இவ்வாறு அறிவுரை வழங்கி பேசினார்.
கூட்டத்தில் தாராபுரம், வெள்ளக்கோவில், குண்டடம், குடிமங்கலம், மூலனூர், பொங்கலூர் ஆகிய மையங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட பால் முகவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தாராபுரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணியன் செய்திருந்தார்.

Categories: DISTRICT-NEWS, Tiruppur
%d bloggers like this: