Home > NEWS > உணவு பாதுகாப்பு அலுவலகம் திறப்பதில்… தொடருது தடுமாற்றம்! அரசு துறைகள் கைவிரிப்பதால் ஏமாற்றம்

உணவு பாதுகாப்பு அலுவலகம் திறப்பதில்… தொடருது தடுமாற்றம்! அரசு துறைகள் கைவிரிப்பதால் ஏமாற்றம்

5,July, 2017

கோத்தகிரி : நீலகிரி மாவட்டத்தில் தாலுகா அளவில், உணவு பாதுகாப்பு ஆய்வாளர்களுக்கு அலுவலகங்கள் இல்லாததால், உணவுப் பொருள் சார்ந்த விதிமீறல்களை கட்டுப்படுத்த முடியாத நிலையுள்ளது.சுற்றுலா நகரான நீலகிரியில் உள்ள கடைகள், ஓட்டல், பேக்கரி உட்பட உணவுப் பொருள் சார்ந்த இடங்களில் கலப்படம், சுத்தம், சுகாதாரமின்மை போன்றவற்றை கண்டறிந்து தடுப்பது, தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா விற்பனையை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்வது போன்ற பணிகளில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்; அத்துறை சார்ந்து, ஊட்டியில் மட்டுமே அலுவலகம் உள்ளது.மேலும், தரமற்ற பொருட்கள், கலப்பட பொருட்கள் குறித்து, கடைகள் தோறும் மாதிரி எடுத்து, ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்துவது, மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டப்படி, வியாபாரிகளை உரிமம் பெறச் செய்வது போன்ற பணிகளில், உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.’மொபைல்’ அலுவலகம்ஊட்டியை தவிர குன்னுார், கோத்தகிரி, கூடலுார், பந்தலுார், குந்தா தாலுகாக்களில், இத்துறை சார்ந்த அலுவலகங்கள் இல்லை. தாலுகா வாரியாக நியமிக்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள், ‘நடமாடும் அலுவலகமாகவே’ செயல்பட வேண்டியுள்ளது. மாவட்டம் முழுக்க, 9 உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் பணியில் இருக்க வேண்டிய சூழலில், 5 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்.இரு தாலுகாவுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் அவர்கள் பணி செய்வதால், களப்பணியில், அவர்களால் முனைப்புக் காட்ட முடிவதில்லை. உரிமம் பெற விண்ணப்பிப்பது, போன்ற வியாபாரிகளின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதிலும் சிரமம் உள்ளது.தொடரும் விதிமீறல்கள்சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களின் கண்காணிப்பில் பலம் குறைவதால், கிராமப்புற கடைகளில், தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா உட்பட பொருட்களின் விற்பனை தடையின்றி நடக்கிறது.ஓட்டல், டீக்கடைகளில் சுகாதாரமற்ற நிலை காணப்படுகிறது. பல கடைகளில், தேயிலை உட்பட உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டு, விற்கப்படுகிறது.அரசுத் துறைகள் கைவிரிப்பு’ஒவ்வொரு தாலுகா அளவில் செயல்படும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலகங்களில், காலியாக உள்ள அறையை, உணவு பாதுகாப்பு துறைக்கு பெற்றுக் கொள்ளலாம்’ என, அரசு வழிகாட்டியுள்ளது. அதற்கான முயற்சியை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், தங்களிடம் காலியாக உள்ள கட்டடத்தை, உணவு பாதுகாப்பு துறையினரின் பயன்பாட்டுக்கு வழங்க, எந்தவொரு அரசுத் துறையும் தயாராக இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, காலியாக உள்ள அரசு கட்டடத்தை உணவு பாதுகாப்பு துறையினருக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது, பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.
லஞ்சம் விளையாடுமா?
மாவட்டத்தின் குறிப்பிட்ட சில இடங்களில், உணவு பாதுகாப்பு துறையில், நீண்ட காலம் பணிபுரியும் சில அலுவலர்கள், அவ்வப்போது, வியாபாரிகளிடம் பெரும் தொகையை கையூட்டு பெற்று வருவதாக புகார் உள்ளது. இந்நிலையில், ஆங்காங்கே அலுவலகம் திறந்தால், துறை சார்ந்த பணிகளில் துறை அலுவலர்களின் பணி எளிமையாகும் என்ற நேர்மறையான எண்ணத்தை விட, அலுவலர்களின் தொல்லை எல்லை மீறும்; லஞ்சம் அதிகரிக்கும் என்ற எதிர்மறை எண்ணமே வியாபாரிகள் மத்தியில் நிலவுகிறது. ஒரு சில அலுவலர்கள் செய்யும் தவறால், ஒட்டு மொத்த நிர்வாகத்தின் மீதான மதிப்பு பாழாகிறது; இதை சரி செய்ய வேண்டியது, துறை தலைமையின் பொறுப்பாக உள்ளது.

Categories: NEWS
%d bloggers like this: