Home > DISTRICT-NEWS, Salem > போலி கடலை எண்ணெய் விற்பனை அமோகம்: உணவு பாதுகாப்புத்துறை சோதனையில் ‘திடுக்’

போலி கடலை எண்ணெய் விற்பனை அமோகம்: உணவு பாதுகாப்புத்துறை சோதனையில் ‘திடுக்’

9,July, 2017

சேலம்: சேலம் மாவட்டத்தில், போலி கடலை எண்ணெய் அதிக அளவில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, 2.95 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில், 2015-16ல், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தலைமையில், அதன் அலுவலர்கள், மாவட்டம் முழுவதும், பல்வேறு, நிறுவனங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில், விதிமுறைக்கு மாறாக, விற்கப்படும், சமையல் எண்ணெய், பால், வெல்லம், ஜவ்வரிசி, உப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு, 25 நிறுவனங்களில், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், மாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்ப்பப்பட்டது. இது தொடர்பாக சேலம், ஆர்.டி.ஒ.நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இதற்கிடையே, பரிசோதனை முடிவில், தரமற்ற, கலப்பட பொருட்கள் விற்பனை செய்தது உறுதி செய்து, அறிக்கை தாக்கல் ஆனது. அதில், அதிக அளவில், போலி கடலை எண்ணெய் விற்பனை செய்யும் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதற்கான இறுதி விசாரணை கடந்த ஜூன்,17ல், நிறைவுபெற்றது. மொத்தம், 3.82 லட்ச ரூபாய் அபராதம் விதித்து, தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், டிவிஎஸ். பிராண்ட் சமையல் எண்ணெய்க்கு, 1.03 லட்ச ரூபாய், பிருந்தா கடலை எண்ணெய்க்கு, 25 ஆயிரம் ரூபாய், நண்டு கடலை எண்ணெய்க்கு, 15 ஆயிரம் ரூபாய், எம்.பி.கடலை எண்ணெய்க்கு, 42 ஆயிரம் ரூபாய், கோல்டுகாய்ன் கடலை எண்ணெய்க்கு, 45 ஆயிரம் ரூபாய், லோட்டஸ் கடலை எண்ணெய்க்கு, 30 ஆயிரம் ரூபாய், அப்பு கோல்டு கடலை எண்ணெய்க்கு, 35 ஆயிரம் ரூபாய் என, மொத்தம், 2.95 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது தவிர, பாகாப்பற்ற, தரமற்றதாக விற்கப்பட்ட உப்பு, வெல்லம், பேக்கரி பொருட்கள், ஜவ்வரிசி, கரும்புசாறு, பால் ஆகியவற்றுக்கு, 87 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம் உணவுபாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் கூறியதாவது: முறைகேடு விற்பனை நிறுவனங்களுக்கு, கடந்த 6ல், தீர்ப்பு நகல் அனுப்பப்பட்டுவிட்டது. அதிகபட்சம், 10 நாளில், அபராதம் வசூலிக்கப்பட்டுவிடும். தொடர்ந்து, அத்தகைய நிறுவனங்கள் கண்காணிக்கப்படுவதோடு, கடலை எண்ணெய் சோதனைகளில் தனிகவனம் செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Categories: DISTRICT-NEWS, Salem
%d bloggers like this: