Home > NEWS > தீபாவளி நேரம்… கல்லாகட்டும் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை… கவனம்!

தீபாவளி நேரம்… கல்லாகட்டும் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை… கவனம்!

தீபாவளிக்குச் சரியாக இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. வார இறுதி நாள்களிலும், மாலை வேளைகளிலும் கடைகளில் அலைமோதுகிறது கூட்டம். தீபாவளி என்றவுடன் அனைவருக்கும் மூன்று விஷயங்கள்தாம் முக்கியமாக நினைவுக்கு வரும்… ஆடைகள், பட்டாசுகள், பலகாரங்கள்.

கடந்த பத்து நாள்களுக்கும் மேலாகவே மக்கள் தீபாவளிக்கான பொருள்களை வாங்குவதில் மும்முரமாகிவிட்டார்கள். சென்னை, மதுரை போன்ற பெருநகரங்கள் மட்டுமல்லாமல், அனைத்து ஊர்களிலுமே களைகட்டத் தொடங்கிவிட்டது `தீபாவளி’ வியாபாரம். ஆடைகளை வாங்கும்போது பிடித்த நிறம், துணி தரமானதுதானா, சாயம் போகுமா… என்பதையெல்லாம் கவனமாகப் பார்த்து வாங்கும் நாம், ஒரு விஷயத்தில் மட்டும் கவனமாக இருப்பதில்லை. அது பலகாரம் செய்வதற்காக வாங்கும் மளிகைப் பொருள்கள். கடைக்காரர்கள் கொடுக்கும் அந்தப் பொருள்கள் தரமானவைதானா என்று பார்க்காமல்கூட வாங்கி வந்துவிடுகிறோம். இந்தக் கவனக் குறைவை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் சில வியாபாரிகள்.

தீபாவளிக் களேபரம், பரபரப்பு இதைப் பயன்படுத்திக்கொண்டு காலாவதியான மளிகைப் பொருள்களை எல்லாம் விற்பனை செய்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியான செய்தி. அப்படி காலாவதியான பொருள்களை விற்பனை செய்யும் ஒரு கடையில் வேலை பார்க்கும் சிறுவன், அந்தத் தகவலை வெளியே கொண்டுவந்திருக்கிறான். இது குறித்து, ஒரு சமூகச் செயல்பாட்டாளர்களுக்குத் தகவல் கொடுத்திருக்கிறான். அந்தச் சிறுவன் தொடர்புகொண்டு பேசிய சமூகச் செயல்பாட்டாளர், தமிழ்நாடு மக்கள் மன்றத்தின் தலைவர் ராஜ்குமார். அவரிடம் பேசினோம்…

“நேற்று முன்தினம் காலையில் ஒரு போன் வந்தது. ஒரு தம்பி பேசினார். காரைக்குடியில், அவர் வேலை செய்யும் கடையில் இந்த தீபாவளி நேரத்தில் காலாவதியான பொருள்களை எல்லாம் விற்பனைக்கு வைத்திருப்பதாகச் சொன்னார். அந்தக் கடை மட்டுமல்லாமல். காரைக்குடியிலுள்ள பலகடைகளில் விநியோகஸ்தர்கள், ஏற்கெனவே ரிட்டர்ன் எடுத்த, காலாவதியான பொருள்களை மறுபடியும் விநியோகம் செய்திருக்கிறார்கள் என்றும் சொன்னார். கடைக்காரர்களிடம் பேசி, அவர்களுக்குத் தெரிந்தேதான் இது நடக்கிறது என்றார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட உடனே சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்றோம். சில பொருள்களை வாங்கினோம். அனைத்துப் பொருள்களுமே காலாவதி ஆகியிருந்தன. அதிலும் குறிப்பாக இடியாப்ப மாவு, குழந்தைகளுக்கான பால்மாவு, மசாலா தூள்கள், டாய்லெட் கிளீனர் போன்றவை.

கடைக்காரரிடம் எதுவுமே பேசாமல் வந்துவிட்டோம். இது தொடர்பாக, உணவுக் கட்டுப்பாட்டுத்துறை அலுவலர்களிடம் புகார் கொடுக்கலாம். ஆனால், அவர்களை நம்புவதைவிட, இந்த விஷயத்தில் மக்கள்தான் கவனமாக இருக்க வேண்டும்’’ என்கிறார் ராஜ்குமார்.

காலாவதியான பொருள்களால் தயாராகும் உணவுகளைச் சாப்பிட்டால் என்னென்ன உடல்நல பாதிப்புகள் உண்டாகும்? உணவியல் நிபுணர் அனிதாவிடம் கேட்டோம். “முதலில் உடலில் நச்சுத் தன்மை உண்டாகும். இது அதிகமாகும்போது குடல் வீக்கம் உண்டாகும். வயிறு உப்பி, வாயுப் பிரச்னை ஏற்படும். தொடர்ந்து ஃபுட் பாய்சன் ஏற்படும். குழந்தைகளுக்கான பால் பவுடர் காலாவதியாகியிருந்தால், பாதிப்புகள் அதிகமாக இருக்கும். மசாலா பொருள்களில் நிறத்துக்காகப் பல்வேறு கெமிக்கல்கள் சேர்த்திருப்பார்கள். அதனால் பக்கவிளைவுகள் அதிகமாக இருக்கும். கெமிக்கல்கள் உடலில் தங்கிவிடும். சில நாள்களுக்குப் பின்னர்தான் அது தெரியவரும். அதற்குள் குடல் வீக்கம் ஏற்பட்டு உடல்நலம் அதிகமாக பாதிப்படைந்திருக்கும். எனவே, எந்தப் பொருளையும் எக்ஸ்பயரி தேதியைப் பார்த்துதான் வாங்க வேண்டும்’’ என்கிறார் அனிதா.

இது தொடர்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை ஆணையர் அமுதாவைத் தொடர்பு கொண்டோம் “தமிழகம் முழுவதும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தினமும் கடைகள், ஹாஸ்டல்கள், ஹோட்டல்கள், பள்ளிகள், கல்லூரிகளில் ஆய்வு செய்கிறார்கள். எங்கே சென்றார்கள், என்ன ஆய்வு செய்தார்கள் என்பது பற்றி தினமும் மாவட்ட அதிகாரிகளிடமிருந்து அறிக்கை பெற்று வருகிறோம். பாதுகாப்பில்லாத உணவுகளைத் தயாரிப்போர்மீது வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கையும் எடுத்துவருகிறோம்.

மக்கள் புகார் அளிக்க விரும்பினால், 9444042322 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ஒரு புகார் வந்தவுடன் அதை மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்புகிறோம். புகாரளித்த 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுத்து, புகார் செய்தவர்களுக்குப் பதில் அனுப்புகிறோம். இது தீபாவளி நேரம் என்பதால், மக்களுக்கும் நுகர்வோருக்கும் இது பற்றி பல்வேறு விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஸ்வீட்ஸ் வாங்கும்போது, எக்ஸ்பயரி தேதி பார்த்து வாங்க அறிவுறுத்துகிறோம். மில்க் ஸ்வீட்ஸுடன் மற்ற ஸ்வீட்களை ஒன்றாகக் கலக்கக் கூடாது. நட்ஸ் வாங்கும்போது பேக்கிங் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். ஆயில் பலகாரங்களில் எண்ணெய் துர்நாற்றம் அடிக்கிறதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

அதேபோல் வணிகர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். அதில் அனைத்துப் பொருள்களிலும் உற்பத்தி செய்யப்பட்ட தேதி கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்றும், எந்தப் பொருளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், எதை வைக்கக் கூடாது என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறோம். மக்களும் கவனமாக வாங்க வேண்டும். வணிகர்களும் நல்ல பொருள்களையே விற்பனை செய்ய வேண்டும். அதையும் மீறிக் கலப்படமோ, காலாவதியான பொருளோ விற்கப்பட்டால் புகார் செய்யுங்கள். புகார் செய்த உடனே எங்கள் அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் முன் இருப்பார்கள்’’ என்கிறார் அமுதா.

மக்கள் தீபாவளி உற்சாகத்தில் கவனமில்லாமல் இருந்துவிடக் கூடாது. வாங்கும் ஒவ்வொரு பொருளையும் கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும். அதுதான் நமக்கும் நம் ஆரோக்கியத்துக்கும் நல்லது!

Categories: NEWS
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: