Home > DISTRICT-NEWS, Thoothukudi > கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை முகாம் நாளை தொடக்கம்

கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை முகாம் நாளை தொடக்கம்

9,January, 2018

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஒன்றியத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சார்பில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை (ஜன. 9) தொடங்குகிறது. 
இதுகுறித்து கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மாரிசாமி, பொன்ராஜ் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006இன் கீழ் உணவு வணிகம் செய்வோர் அனைவரும் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும். 
உணவு வணிகம் செய்வோர் ஆண்டுக்கு ரூ. 12லட்சத்திற்கு கீழ் விற்று கொள்முதல் புரிவோர் பதிவுச் சான்றிதழ் பெற தகுதியுடையவர் ஆவர். ரூ. 12 லட்சத்திற்கு மேல் விற்று கொள்முதல் புரிவோர் உரிமம் பெற தகுதியுடையவர் ஆவார். பதிவுச் சான்று அல்லது உரிமம் இல்லாமல் உணவு வணிகம் செய்வது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவு 31இன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். 
எனவே, இந்தக் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு உணவு வணிகர்கள் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் பெறவேண்டும். இதையடுத்து, கோவில்பட்டி ஒன்றியத்திற்கு உள்பட்ட உணவு விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்களுக்கான உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் நிர்ணயச் சட்டம் உரிமம் மற்றும் பதிவு முகாம் கோவில்பட்டி, கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 
எட்டயபுரம் வர்த்தக சங்க கட்டடத்தில் புதன்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரையும் இம்முகாம் நடைபெறுகிறது. 
இந்த முகாம்களை கோவில்பட்டி ஒன்றியத்திற்கு உள்பட்ட பதிவு மற்றும் உரிமம் பெறாத உணவு வணிகர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. 
கயத்தாறு ஒன்றியத்திற்கு உள்பட்ட உணவு வணிகர்களுக்கு கழுகுமலை காளவாசல் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள அன்னை எலெக்ட்ரிக்கல்ஸ் பண்டக சாலையில் செவ்வாய்க்கிழமை (ஜன.9) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. கயத்தாறு தெற்கு தெருவில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் புதன்கிழமை (ஜன.10) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 
கயத்தாறு ஒன்றியத்திற்கு உள்பட்ட உரிமம் மற்றும் பதிவு பெறாத உணவு வணிகர்கள் இம்முகாமை பயன்படுத்தி உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories: DISTRICT-NEWS, Thoothukudi
%d bloggers like this: