Home > DISTRICT-NEWS, Tiruvannamalai > திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி பேக்கரி, குளிர்பான கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி பேக்கரி, குளிர்பான கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

29,April, 2018

திருவண்ணாமலை, ஏப்.29: திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி பேக்கரி, குளிர்பான கடைகளில் நேற்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின்பேரில், மாவட்ட நியமன அலுவலரும், உணவு பாதுகாப்பு அலுவலருமான செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கலைஷ்குமார், சுப்பிரமணியன் உட்பட 18 பேர் கொண்ட குழுவினர் திருவண்ணாமலையில் உள்ள அன்னதான கூடங்கள், பேக்கரி, குளிர்பான கடைகள், டீக்கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். ஆய்வின்போது ₹25 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான குளிர்பானங்கள், அழுகிய பழங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் கூறியதாவது:திருவண்ணாமலையில் உள்ள உணவகங்கள், டீக்கடைகள், குளிர்பான கடைகள், பேக்கரிகளில் கடந்த 26ம் தேதி முதல் சோதனை நடத்தி வருகிறோம். உணவகங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது. சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். டீக்கடைகளில் கலப்பட டீத்தூளை பயன்படுத்தக்கூடாது. அன்னதான கூடங்கள் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். காலாவதியான உணவு பொருட்களை யாரும் விற்பனை செய்யக்கூடாது. உணவு பொருட்களில் கண்டிப்பாக தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி குறிப்பிட்டிருக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்தக்கூடாது.இந்த ஆய்வின்போது காலாவதியான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் உணவு தரச்சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் உணவு தரம் குறித்து 9444042322 என்ற நம்பருக்கு தெரிவிக்கலாம்.

%d bloggers like this: