Home > DISTRICT-NEWS, Nagapattinam > அரசு அலுவலர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் இணைந்து அயோடின் உப்பு தயாரிப்பு பகுதிகளில் ஆய்வு

அரசு அலுவலர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் இணைந்து அயோடின் உப்பு தயாரிப்பு பகுதிகளில் ஆய்வு

11,June, 2018

image

அயோடின் சத்து மனித வாழ்வுக்கு இன்றியமையாது தேவைப்படும் ஒரு நுண்ணூட்டச் சத்து ஆகும்.  இந்த சத்து மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படுகின்றது.  இயற்கையாக கிடைத்து வந்த அயோடின் மண் அரிப்பின் காரணமாகவும், இயற்கை சீற்றங்களின் காரணமாகவும் தற்போது போதிய அளவு கிடைப்பதில்லை.  ஆதலால் இந்திய அரசு இந்த அயோடின் சத்தினை மக்களுக்கு கிடைக்கச்செய்திட உணவிற்கான உப்பில் அயோடின் கலந்து அளிக்க முடிவு செய்து உணவிற்காக விற்பனைச் செய்யப்படும் உப்பில் கட்டாயம் அயோடின் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதோடு உணவுப்பாதுகாப்புச் சட்டத்திலும் இதனை சட்டமாக இயற்றியுள்ளது.  
அயோடின் சத்து பற்றாக்குறையால் குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் அறிவு மந்தம் ஏற்படுவதால் அவர்களின் கற்றல் திறனும் குறைகின்றது.  குழந்தை இறந்து பிறத்தல், உடல் ஊனம், அதீத உடல் சோர்வு, முன் கழுத்து கழலை போன்றவையும் அயோடின் குறைபாட்டினால் ஏற்படுகின்றது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய உப்பு உற்பத்தி செய்யும் இடமாகும்.  இங்கிருந்து அண்டை மாவட்டங்களுக்கும் மற்றும் பிற மாநிலங்களுக்கும் உணவுக்கான உப்பு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றது.  தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் சார்பில் உப்பு உற்பத்தி பகுதி மற்றும் விற்பனை பகுதியில் உணவிற்காக விற்பனை செய்யும் உப்பு மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து அறிக்கையினை உப்பு உற்பத்தி பகுதி மாவட்ட நிர்வாகத்திற்கும் உணவுப்பாதுகாப்புத்துறைக்கும் தெரிவித்து வருகின்றது.  உப்பு உற்பத்தி பகுதியில்  உணவிற்கான உப்பில் அயோடின் கலக்கப்படாமல் உப்பு பொட்டலமிடப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுவதாக எமது அமைப்பு அளித்த புகார்களின் அடிப்படையில் நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அயோடின் உப்பு கண்காணிப்புக்குழு தலைவர் திரு.சுரேஸ்குமார் அவர்களின் உத்தரவின் பேரில் நாகை மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செல்வராஐ;, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) திரு.பாஸ்கரன், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் திரு.பாலகுரு, திரு,கோதண்டபாணி, திரு.ஆண்டனி பிரபு  மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர் திரு.கார்த்திகேயன்   ஆகியோர் வேதாரண்யம் உப்பளப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.  அயோடின் கண்காணிப்புகுழு நுகர்வோர் அமைப்பின் பிரதிநிதியான தமிழ்நாடு நுகர்வேர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தை சேர்ந்த திருநாவுக்கரசும் உடனிருந்தார்;.
ஆய்வின்போது முழு முகவரி பிரசுரிக்கப்படாத பாக்கெட்டுகளில் உணவிற்கான உப்பு அடைத்து விற்பனைக்கு அனுப்பப்படுவதும் மற்றும் போதிய அளவு அயோடின் கலக்கப்படாமல் உணவு உப்பு தயாரிக்கப்பட்டு வருவதும் கண்டறியப்பட்டது.  உணவுப்பாதுகாப்புச் சட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக அயோடின் போதுமான அளவு கலக்காத உப்பை “பதப்படுத்துவதற்கான உப்பு” என பொட்டலமிட்டு ஆனால் உணவுக்காக விற்பனைக்கு அனுப்பப்படுவதும் கண்டறியப்பட்டது.  வேதாரண்யம் பகுதியில் எடுக்கப்பட்ட 7 நிறுவனங்களின் உப்பு மாதிரிகள் அனைத்தும் அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வுக் கூடத்திற்கு ஆய்வுக் கூட சோதனைக்கு அனுப்பியதில் அனைத்தும் 5 பி.பி.எம். அளவினை விட குறைவாகவே உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.  உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின் படி உப்பு உற்பத்தி பகுதியில் 30 பி.பி.எம். அளவிற்கு குறையக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேற்கண்ட நிறுவனங்கள் பெரும்பாலும் தொழிலாளர் துறையில் பெற வேண்டிய பாக்கர் உரிமமும் பெறவில்லை மேலும் உணவுப்பாதுகாப்புத்துறையில் பெற வேண்டிய உரிமம் பெறவில்லை என்பதையும் கண்டறியமுடிந்தது.
இந்த ஆய்வு முடிவுகளை நாகை மாவட்ட ஆட்சியருக்கும், உணவுப்பாதுகாப்பு ஆணையர் மற்றும் தொழிலாளர் துறை ஆணையர் ஆகியோருக்கு அறிக்கையாக அனுப்பி நடவடிக்கை எடுக்க இருப்பதாக நுகர்வோர் அமைப்பின் தலைவர் முனைவர்.S.D.அண்ணாதுரை மற்றும் பொதுச்செயலர் திரு.R.ரமேஷ் ஆகியோர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

%d bloggers like this: