Home > Dharmapuri, DISTRICT-NEWS > மாவட்டத்தில் உள்ள கரும்பு ஆலைகளில் ரசாயன கலப்படம் இல்லாத நாட்டு சர்க்கரை தயாரிப்பு

மாவட்டத்தில் உள்ள கரும்பு ஆலைகளில் ரசாயன கலப்படம் இல்லாத நாட்டு சர்க்கரை தயாரிப்பு

22,August, 2018

தர்மபுரி மாவட்டத்தில், பாப்பாரப்பட்டி, கடகத்தூர், முத்துக்கவுண்டன் கொட்டாய், முக்கல்நாயக்கன்பட்டி, புலிகரை, பாலக்கோடு உள்ளிட்ட இடங்களில் 50க்கும் மேற்பட்ட கரும்பு ஆலைகள் செயல்படுகின்றன. கடகத்தூர் செல்லும் சாலையில் முத்துகவுண்டன் கொட்டாய் கிராமத்தில் உள்ள ரசாயனம் கலக்காத நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. இவை பாக்கெட்டுகளில் அடைத்து கடைகளுக்கு மொத்த விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
   ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், கரும்பில் இருந்து நாட்டு சர்க்கரை, மண்டை வெல்லம், அச்சு வெல்லம் போன்றவை தயாரிக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் கடகத்தூர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட கரும்பு ஆலைகள் உள்ளன. இதில் நாங்கள் கரும்பில் இருந்து நாட்டு சர்க்கரை தயாரிக்கிறோம். தற்போது மக்கள் ரசாயனம் கலக்காத இயற்கையான சர்க்கரையை விரும்புகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் பல டீக்கடைகளில் இந்த சர்க்கரையை தான் பயன்படுத்துகின்றனர்.
மக்கள் விருப்பத்திற்கேற்ப நாட்டு சர்க்கரையை தயாரிக்கிறோம். தற்போது மாவட்டத்தில் கரும்பு விளைச்சல் போதிய அளவிற்கு இல்லாததால் கர்நாடக மாநிலம் மைசூரு, மாண்டியாவில் இருந்து கரும்புகளை வாங்கி வருகிறோம். கர்நாடகாவில் இருந்து தர்மபுரிக்கு கரும்பு கொண்டு வந்து சேர்க்க ஆள் கூலியுடன் ஒரு டன்னுக்கு ₹3,600 வரை செலவாகிறது. இந்த ஆலையில் 10 பேர் வரை பணியாற்றுகின்றனர். தினமும் 5 டன் கரும்பில் இருந்து பால் பிழிந்து அதை பெரிய சட்டியில் ஊற்றி காய்ச்சுகிறோம். கரும்பு பாகு பதத்திற்கு வந்ததும் அதனுடன் எலுமிச்சை மற்றும் சுண்ணாம்பு கலக்கிறோம்.
இதனால் கரும்பு பாகு உதிரியாக பிரிந்து விடுகிறது. வேறு ரசாயண பொருட்கள் கலக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் கடுமையாக எச்சரிப்பதாலும், மக்களும் இயற்கையை விரும்புவதால் ரசாயன கலப்பின்றி இயற்கையான நாட்டு சர்க்கரை தயாரிக்கிறோம். தினமும் 5 டன் கரும்பில் இருந்து 500 கிலோ சர்க்கரை தயாரிக்கிறோம். நாட்டு சர்க்கரையை மொத்த வியாபாரிகள் இங்கேயே வந்து வாங்கி செல்கின்றனர். இது தவிர நாங்கள் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கிறோம். இது தவிர உள்ளூர் வியாபாரத்திற்காக அரை கிலோ ஒரு கிலோவாக பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது, என்றனர்.

Categories: Dharmapuri, DISTRICT-NEWS
Comments are closed.
%d bloggers like this: