Home > NEWS > உணவுப்பொருட்களில் கலப்படம் கண்டறிதல்: வியாபாரிகள், அலுவலர்களுக்கு விழிப்புணர்வு

உணவுப்பொருட்களில் கலப்படம் கண்டறிதல்: வியாபாரிகள், அலுவலர்களுக்கு விழிப்புணர்வு

8,July, 2019

மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில், உணவுபொருட்கள் கலப்படத்தை கண்டறியும் விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில், தரமில்லாத உணவு பொருட்கள் விற்பனையை தடுப்பது, கலப்பட உணவு பொருட்களை கண்டறிதல் குறித்து வழிகாட்டுதல் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், வியாபாரிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை கலெக்டர் பழனிசாமி அறிவுறுத்தினார். உணவகங்கள், திருமண மண்டபங்களில் உணவை கையாளும் பணியாளர்களுக்கு தன் சுத்தம் மற்றும் உணவு பாதுகாப்பின் அவசியம் குறித்தும் பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் தரமாக இருக்க வேண்டும். மேலும், இவ்விடங்களில் விற்கப்படும் உணவு பொருட்கள் கூடுதல் விலையுடன் இருக்கக்கூடாது, விலை கூடுதலாக விற்பனை செய்வோர் மீது, நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.ஏற்கனவே இறந்த கோழிகள் மற்றும் நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகளை, விற்பனை செய்பவர்கள் மீதும், அவற்றை அப்புறப்படுத்தாமல் பொது இடங்களில் கொட்டுபவர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்க்க, ஆய்வுகள் தீவிரப்படுத்தப்படும். மேலும், பள்ளிகளில் உணவு கலப்படத்தை கண்டறியும் விழிப்புணர்வு பயிற்சிகள் தொடர்ந்து நடத்த, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவுப்பொருட்கள் கலப்படம் தொடர்பான அனைத்து புகார்களுக்கும், 944042322 என்ற ‘வாட்ஸ்ஆப்’, எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.இவ்வாறு உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாநகராட்சி, ஒன்றியம், நகராட்சி மற்றும் பேரூராட்சி அரசுத்துறைகளும் இணைந்து, நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என, கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், உணவு பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களும், வியாபாரிகள் சங்க உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

Categories: NEWS
%d bloggers like this: