Home > NEWS > உணவு பாதுகாப்பு சட்டத்தில் முரண்பாடுகளை களைய வேண்டும்: கருத்து கேட்பு கூட்டத்தில் வணிகர்கள் கோரிக்கை

உணவு பாதுகாப்பு சட்டத்தில் முரண்பாடுகளை களைய வேண்டும்: கருத்து கேட்பு கூட்டத்தில் வணிகர்கள் கோரிக்கை

8,July, 2019

உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்து கேட்புக்கூட்டத்தில் வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மதுரையில் தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் உணவுப்பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச்சட்டம், பொது சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவை தொடர்பாக வணிகர்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
அச்சங்கத்தின் தலைவர் ஜெயப்பிரகாசம் தலைமை வகித்தார். கூட்டத்தில் பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா, தணிக்கையாளர் ஆர்.சுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். 
கூட்டத்தில் உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் தொடர்பாக வணிகர்கள் கருத்துக்களை தெரிவிக்கும்போது, உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டபோது, பல்வேறு குளறுபடிகள் இருந்தன. ஆனால் 2014-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, அச்சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. முதலாவதாக சட்டங்கள் கொண்டு வரும்போது, அச்சட்டத்தை வணிகர்கள் தெரிந்துகொள்ள உதவியாக மாநில மொழிகளில் கொண்டு வர மாநில அரசு முயற்சி எடுக்க வேண்டும். உணவுப்பாதுகாப்புச் சட்டத்தில் ஒரு நிறுவனம் உரிமம் பெறும்போது 11 மாதங்கள் மட்டுமே செல்லுபடியாகிறது. பிறகு மீண்டும் உரிமம் பெறவேண்டியுள்ளது. எனவே ஒரு முறை உரிமம் பெற்றால் 5 ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று திருத்தம் செய்ய வேண்டும். விவசாய விளை பொருளான மல்லியை பதப்படுத்தாவிட்டால் கெட்டு விடும். ஆனால் சல்பரை பயன்படுத்தி பதப்படுத்தக்கூடாது என்று சட்டம் கூறுகிறது. எனவே மல்லியை பதப்படுத்த சல்பரின் அளவை நிர்ணயம் செய்து அனுமதி அளிக்க வேண்டும். தற்போது பல இடங்களில் வெல்லத்தில் சீனி கலந்து தயாரிக்கப்படுகிறது. இதை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வது இல்லை. எனவே இதற்கு அனுமதி வழங்க வேண்டும். தமிழகத்தில் இயற்கையான முறையில் எடுக்கப்படும் உப்பில் சல்பரின் அளவு 94 சதவிகிதமாக உள்ளது. 
ஆனால் அதிகாரிகள் சல்பர் அளவு 96 சதவிகிதம் இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். எனவே தமிழக உப்புக்கு 94 சதவிகிதத்தை அனுமதிக்க வேண்டும். கார்பனேட் கலந்துள்ள குளிர்பானங்களில் 10 சதவிகிதம் பழச்சாறு கட்டாயம் கலக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். இதன்மூலம் பழ வகைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பயன்கிடைக்கும். போடி, கம்பம் பகுதியில் விளையும் ஏலக்காயில் பூச்சி மருந்துகள் அதிகம் இருப்பதாக வளைகுடா நாடுகள் தடை விதித்துள்ளன. எனவே ஏல விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிறுதானியங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சேமியாக்களுக்கு அதிகாரிகள் தடை விதிப்பதை தடுக்க வேண்டும். இதுபோன்ற மாற்றங்களை உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் கொண்டு வர வேண்டும்.
மேலும் பொது சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருள்களுக்கு வரி விலக்கு வேண்டும். வெல்லம், கருப்பட்டிக்கு வரி விலக்கு உள்ள நிலையில் பனங்கற்கண்டுக்கு வரி விதிக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும்.  இட்லி, தோசை மாவுகளுக்கு வரி விலக்கு வேண்டும். நோயாளிகளின் உணவான ரொட்டிக்கு வரி விலக்கும், ரஸ்க்க்கு வரியும் விதிக்கப்படுகிறது. இதை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் பல ஆண்டுகளாக உரம், நுண்ணூட்டம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றுக்கு வரி விதிக்கப்படுவது இல்லை.ஆனால் தற்போது உரத்துக்கு 5 சதவிகிதம், நுண்ணூட்டத்துக்கு 12 சதவிகிதம், பூச்சிமருந்துக்கு 18 சதவிகிதம் விதிக்கப்படுகிறது. இதற்கு விலக்களிக்க வேண்டும். ஏழைகள் பயன்படுத்தும் அலுமினிய பாத்திரங்களுக்கு முன்பு வரி விலக்கு இருந்த நிலையில் தற்போது 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால் ஏழைகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அனைத்து வீடுகளிலும் இருக்கும் அத்தியாவசிய சமையல் பொருள்களான மசாலா பொடி, கடுகு,சீரகம் உள்ளிட்ட பொருள்களுக்குவரி விலக்கு வேண்டும். கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படும் புண்ணாக்குக்கு வரி விதிப்பது தீவன செலவை அதிகரிக்கும் என்றனர்.

Categories: NEWS
%d bloggers like this: