Home > NEWS > கலப்படம் செய்யப்பட்டுள்ளதா?.. தமிழக பால் வாகனங்களில் கேரள அதிகாரிகள் சோதனை

கலப்படம் செய்யப்பட்டுள்ளதா?.. தமிழக பால் வாகனங்களில் கேரள அதிகாரிகள் சோதனை

8,September, 2019

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பாலின் தரம் குறித்து, குமுளி சோதனைச்சாவடி அருகே கேரள அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து தினமும் லட்சக்கணக்கான லிட்டர் பால் கேரளா கொண்டு செல்லப்படுகிறது. சில நாட்கள் வரை பால் கெடாமல் இருக்க, அதில் பார்மலின் என்ற வேதிப்பொருள் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. கேரளாவில் செப்.11ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகப் பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லும் பாலில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை சோதனை செய்யுமாறு கேரள உணவு பாதுகாப்பு அமலாக்கப் பிரிவு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழக, கேரள  எல்லைப்பகுதிகளில், தமிழகத்திலிருந்து வரும் பால் வாகனங்களை கேரள அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் பாலின் மாதிரியை சோதனை செய்வதற்காக எல்லைப்பகுதிகளில் தற்காலிக ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. குமுளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இப்பகுதி வழியாக வரும் அனைத்து பால் வாகனங்களிலும் சேகரிக்கப்பட்ட பால் சாம்பிள்களில் யூரியா, காரம், பார்மலின் கலந்துள்ளதா என ஆய்வகத்தில் சோதனை செய்கின்றனர். ஆய்வுக்குப் பின்னரே பால் வாகனங்கள் கேரளாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன. ‘ஓணம் வரை இந்த ஆய்வகம் செயல்படும். 24 மணி நேரமும் பரிசோதனை நடைபெறும்’ என கேரள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories: NEWS
%d bloggers like this: