Home > NEWS > பொதுமக்கள் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களிடம் பால் வாங்கவேண்டும் உணவு மற்றும் மருந்துத்துறை வேண்டுகோள்

பொதுமக்கள் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களிடம் பால் வாங்கவேண்டும் உணவு மற்றும் மருந்துத்துறை வேண்டுகோள்

31,May, 2015

மும்பை,

அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களிடம் இருந்து பால் வாங்குமாறு பொதுமக்களுக்கு உணவு மற்றும் மருந்துத்துறை வேண்டுகோள் விடுத்து உள்ளது.

கலப்பட பால் மராட்டியத்தில் பால் கலப்படத்தை தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், உணவு மற்றும் மருந்து துறையினர் 16 குழுக்களாக பிரிந்து மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு குழுவிற்கு 4 அல்லது 5 உணவுப்பொருள் ஆய்வாளர்கள் இடம் பெற்று உள்ளனர். மும்பையில் மட்டும் கலப்பட பால் விற்பனையை தடுக்க 3 குழுவினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த குழுவினர் மும்பையில் மலாடு குடிசைப்பகுதி மற்றும் ஜெடாநகரில் நடத்திய சோதனையில் 935 லிட்டர் கலப்பட பாலை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக பாண்டு வித்யா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேண்டுகோள் இதேப்போல் தானே, சோலாப்பூர், சாங்கிலி, சதாரா ஆகிய 30–க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து பால் மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். மேலும் சாங்கிலி பகுதியில் சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டுருந்த 1,879 கிலோ பால் கீரிமை கைப்பற்றி அழித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களிடம் இருந்து மட்டும் பால் வாங்க வேண்டும். அல்லது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணைய உரிமம் அல்லது பதிவு செய்தவர்களிடம் மட்டுமே பால் வாங்கவேண்டும் என உணவு மற்றும் மருந்துத்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளது.

மேலும் பால் கலப்படத்தில் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு மற்றும் மருந்துத்துறை மாநில கமிஷனர் ஹர்சதீப் காம்ளே கூறினார்.

Categories: NEWS