Home > DISTRICT-NEWS, Thoothukudi > சாத்தான்குளம் அருகேகடையில் தின்பண்டம் சாப்பிட்ட 5 மாணவர்கள் மயக்கம்

சாத்தான்குளம் அருகேகடையில் தின்பண்டம் சாப்பிட்ட 5 மாணவர்கள் மயக்கம்

7,September, 2014

சாத்தான்குளம் அருகே பள்ளி முன்புள்ள கடையில் தின்பண்டம் சாப்பிட்டு 5 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். இதையொட்டி சனிக்கிழமை உணவு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் காலாவதியான பொருள்களை பறிமுதல் செய்தனர்.

கருங்கடலில் தனியார் நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவர், மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்கள் பள்ளி இடைவேளையின் போது பள்ளி அருகில் உள்ள கடையில் மிட்டாய் உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கிச் சாப்பிடுவது வழக்கமாம். வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் முன் செல்சியா (10), அகஸ்டின் (11), ஆரோக்கிய ரிஷி (12), மினிபா (11), ரூபியா (12) ஆகிய 5 மாணவ,மாணவியர் அந்தக் கடையில் தின்பண்டங்களை வாங்கிச் சாப்பிட்டனராம். சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஐத்து பேரும் மயங்கி விழுந்தனராம். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அவர்களை மீட்டு சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைக்கு பின் 4 பேர் வீடு திரும்பினர். மாணவி ரூபியா (12) திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் சனிக்கிழமை வீடு திரும்பினார். காலாவதியான தின்பண்டத்தைச் சாப்பிட்டதால் அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதாகத் தெரியவந்தது.

இதை அறிந்த ஆழ்வார்திருநகரி உணவு ஆய்வாளர் மாரியப்பன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வடிவேல், சாத்தான்குளம் உணவுப் பாதுகாப்பு அதிகாரி முத்துராஜ் மற்றும் சாலைப்புதூர் சுகாதார ஆய்வாளர்கள் பள்ளி அருகில் உள்ள கடையில் சோதனையிட்டு காலாவதியான பொருகள்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் பேய்க்குளம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி காலாவதியான பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருள்களைப் பறிமுதல் செய்து அழித்தனர். காலாவாதியான மற்றும் தடை செய்யப்பட்ட பொருள்களை வியாபாரிகள் விற்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

Categories: DISTRICT-NEWS, Thoothukudi