Home > NEWS > மதுபானங்களுக்கு உணவு பாதுகாப்பு ஆணையம் கிடுக்கி : அனைத்து விவரங்களும் பாட்டிலில் இடம்பெற உத்தரவு

மதுபானங்களுக்கு உணவு பாதுகாப்பு ஆணையம் கிடுக்கி : அனைத்து விவரங்களும் பாட்டிலில் இடம்பெற உத்தரவு

7,September, 2014

மதுபான விற்பனை மற்றும் இறக்குமதியில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், மதுபான புழக்கத்தை குறைக்கலாம்’ என, செய்திகள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில், மது விற்பனையை மாநில அரசே முன்னின்று நடத்தி வருகிறது. ‘டாஸ்மாக்’ கடைகளின் மூலம் கிடைக்கும் வருமானம், மாநில அரசின் ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கு பெரும் உதவி புரிவதால், அரசு ஆண்டுதோறும் டாஸ்மாக் கடைகளில் இலக்கு நிர்ணயித்து விற்பனையை ஊக்குவிக்கிறது.எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,எனினும், அனைத்து துறை வளர்ச்சியிலும், நாட்டின் முன்னோடி மாநிலமாக கூறப்படும், குஜராத்தில் மது விற்பனை அறவே கிடையாது.காந்தியடிகள் பிறந்த மண் என்பதால், அங்கு மது விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், சமீபத்தில் கேரளாவில், மதுபான பார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மதுபான உற்பத்தி மற்றும் இறக்குமதியில், இந்திய உணவுப் பாதுகாப்புமற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,) பிறப்பித்துள்ள புதிய உத்தரவு, அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த உத்தரவின் மூலம், ‘போலி மதுபானங்களின் விற்பனை தடுக்கப்படும்; தரம் குறைந்த மதுபானங்களின் இறக்குமதி தடுக்கப்படும்’ என, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பிறப்பித்துள்ள உத்தரவின் முக்கிய அம்சங்கள்:
*மதுபானங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், அதில் கலந்துள்ள பொருட்கள் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய, ‘ஸ்டிக்கர்’களை பாட்டில்களின் மேல் பகுதியில் ஒட்ட வேண்டும்.
*ஒரு சில பொருட்களின் பெயர்கள் மட்டும் இடம் பெற்றிருந்தால் போதாது. அனைத்து மூலப்பொருட்கள், வேதிப் பொருட்களின் பெயர்கள், அதன் விகிதாச்சாரம் போன்ற அனைத்து தகவல்களும் இடம் பெற வேண்டும்.
*இவை அனைத்தும், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒன்றில் கட்டாயம் அச்சிடப்பட வேண்டும்.
*இறக்குமதியின் போது, மதுபானங்களின் தரம் சோதிக்கப்படும். கலப்படம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டாலோ அல்லது அதில் கலக்கப்பட்ட பொருட்களின் பெயர்கள் ஸ்டிக்கர்களில் இடம் பெறத் தவறினாலோ அந்த சரக்குகள் இறக்குமதி செய்யப்பட மாட்டாது.
*தவிர, கலவை விகிதாச்சாரத்தில் மாறுபாடு ஏற்பட்டாலும், அந்த சரக்குகள் நிராகரிக்கப்படும்.
*தற்போதைய நடைமுறையின் படி, மதுபானப் பொருட்களில், ‘வெஜ்’ அல்லது ‘நான் வெஜ்’ என மட்டும் அச்சிட்டிருந்தால் அவை அனுமதிக்கப்பட மாட்டாது.
*மக்களின் நலனை பாதுகாக்கவும், நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்யவுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த நடைமுறை, 2011ல் முன்மொழியப்பட்டது. எனினும், மார்ச் 2014 முதல், முழு மூச்சாக கடைபிடிக்கப்படுகிறது. இதனால், இறக்குமதி செய்யப்பட வேண்டிய ஏராளமான மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வரி வருவாய் குறையும்:

இந்த நடவடிக்கையால், எதிர் வரும் பண்டிகை கால விற்பனை பெரிதும் பாதிக்கப்படும். மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயும் குறையும். எனினும், வருமானத்தை விட, மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மதுபானங்களின் தரத்தில் எவ்வித சமரசமும் செய்யப்படவில்லை. இது முதலில் கசப்பான நடவடிக்கை போல் தெரிந்தாலும், நாளடைவில் இனிக்கும். இதன் மூலம், பொதுமக்களின் நலன் பாதுகாக்கப்படும். உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள், இனி, போலிப் பொருட்களை சந்தையில் விற்பனைக்கு விட முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

விளைவுகள் என்ன?

*புதிய உத்தரவால், இத்தாலி, ஜெர்மனி போன்ற வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேங்கியுள்ளன. அவற்றின் பாட்டில்களில் மேற்கண்ட உத்தரவின் படி, விவரங்கள் இடம்பெறாததால் அந்த சரக்குகளை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
*சாதாரண நாட்களை விட, பண்டிகை காலங்களில் சரக்கு விற்பனை அமோகமாக இருக்கும். அவ்வகையில் இனி வரும் பண்டிகை நாட்களான, தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய பண்டிகைகளில், வெளிநாட்டு சரக்குகளின் தேவையும் அதிகரிக்கும்.
*அது போல், உள்நாட்டு மதுபான தயாரிப்பு நிறுவனங்களும், ஏற்கனவே தயாரித்த மது பாட்டில்களில் இதுபோன்ற விவரங்களை வெளியிடாததால், அந்த பாட்டில்களின் விற்பனையிலும் தடை ஏற்படும் அபாயம் உள்ளது.
*தவிர, உலக நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் மதுபான சரக்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதால், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவை பின்பற்ற தயக்கம் காட்டுகின்றன. இதனால், வெளிநாட்டு மதுபான இறக்குமதியில் பெரும் சரிவு ஏற்படும்.

யாருக்கு லாபம்?

மதுபான இறக்குமதி பாதிக்கப்படுவதால், விற்பனையில் மந்த நிலை காணப்படும். இதனால், மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாய் பெரிதும் குறையும். எனினும், தரமற்ற மதுபானங்களின் விற்பனையால் கிடைக்கும் வருமானத்தை விட, பொதுமக்களின் நலனே முக்கியம் எனக் கருதி, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்க வகையில் இருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்த முடிவு, அரசின் வருமானத்தை பாதிக்கும் என்றாலும், பொதுமக்களுக்கு நல்ல பலனையே கொடுக்கும் என, மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Categories: NEWS