Home > DISTRICT-NEWS, Namakkal > தேக்கம்! : மண்டியில் ரூ.1.50 கோடி வெல்ல சிப்பம்… : பறிமுதலுக்கு பயந்து வியாபாரிகள் தயக்கம்

தேக்கம்! : மண்டியில் ரூ.1.50 கோடி வெல்ல சிப்பம்… : பறிமுதலுக்கு பயந்து வியாபாரிகள் தயக்கம்

8,September, 2014

ப.வேலூர்: அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுவார்கள் என்ற பயத்தில், வியாபாரிகள் வெல்லத்தை ஏலம் எடுக்காததால், மண்டியில், 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள வெல்லம் தேக்கம் அடைந்துள்ளது. இது விவசாயிகளை கடும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

ப.வேலூர் அடுத்த ஜேடர்பாளையம், சோழசிராமணி, கபிலர்மலை, ஆனங்கூர், பிலிக்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 120க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. அங்கு, உருண்டை மற்றும் அச்சு வெல்லங்கள் தயாரித்து, தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. ஒவ்வொரு வாரமும், புதன் மற்றும் சனிக்கிழமைகளில், பிலிக்கல்பாளையம் வெல்லம் மண்டியில், பல பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், உற்பத்தியாளர்களிடம் இருந்து, வெல்லத்தை ஏலத்தில் வாங்கிச் செல்வர். அதற்காக அப்பகுதியில், 12 ஏலமண்டிகள் செயல்படுகிறது.

ஏலத்தில் கொண்டு வரப்படும் வெல்லத்தில், ரசாயனப்பொருட்கள் கலப்பதுடன், வெல்லப்பாகுவில், அஸ்கா கலந்து தயாரித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில், விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அதில், வெல்லம் தயாரிக்கும்போது, வெல்லப்பாகுவில் சர்க்கரை (அஸ்கா) கலக்கக்கூடாது, ரசாயனப் பொருட்கள் எதுவும் கலக்காமல், இயற்கையான முறையில் வெல்லம் தயாரிக்க வேண்டும். அதேபோல், கலப்படம் செய்து விற்கப்படும் வெல்லத்தை வியாபாரிகளோ, மண்டிக்கடைக்காரர்களோ வாங்கி விற்பனை செய்யக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம், பிலிக்கல்பாளையம் வெல்ல மண்டிக்கு, 16 ஆயிரம் சிப்பம் ஏலத்துக்கு கொண்டுவரப்பட்டது. அந்த வெல்லத்தில், நச்சுத்தன்மை கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதனால், வியாபாரிகள் யாரும் வெல்லத்தை ஏலம் எடுக்கவில்லை. அதன் காரணமாக, 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள வெல்ல சிப்பம், தேக்கம் அடைந்துள்ளது.

Categories: DISTRICT-NEWS, Namakkal