Home > DISTRICT-NEWS, Namakkal > வட மாநிலங்களில் அதிக கிராக்கி: ஜவ்வரிசி விலை இரு மடங்கு உயர்வு : ரசாயன கலப்படம் இல்லாததால் நல்ல வரவேற்பு

வட மாநிலங்களில் அதிக கிராக்கி: ஜவ்வரிசி விலை இரு மடங்கு உயர்வு : ரசாயன கலப்படம் இல்லாததால் நல்ல வரவேற்பு

8,September, 2014

நாமக்கல் :ஜவ்வரிசி மாவில், மக்காச்சோள மாவு மற்றும் ரசாயனம் கலப்படம் செய்வதை தவிர்த்து, இயற்கை முறையில் (ஆர்கானிக் சேகோ) தயார் செய்வதால், வடமாநிலங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் காரணமாக, தற்போது மரவள்ளி கிழங்கு மற்றும் ஜவ்வரிசி ஆகியவற்றின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், நாமக்கல், சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில், மரவள்ளி கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
அரசின் உரிமை பெறாமல்…:மரவள்ளி கிழங்கு மூலம், ஜவ்வரிசி, மாவு உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன. நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலுார், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், சேகோ, ஸ்டார்ச் ஆலைகள் அதிகளவில் உள்ளன.
இங்கு உற்பத்தி செய்யப்படும், ஜவ்வரிசி மற்றும் மாவு வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதன் மூலம் சேமியா, சிப்ஸ் உள்ளிட்ட, 64 வகையான உணவு பொருள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், ஜவ்வரிசி உற்பத்தியில், உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறையை பின்பற்றாமல், அரசின் உரிமம் பெறாமல், ஈர மாவு விற்பனை செய்து வருகின்றனர்.அந்த ஈரமாவில், மக்காச்சோளம், 75 சதவீதமும், மரவள்ளி கிழங்கு மாவு, 25 சதவீதமும் கலப்படம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அவ்வாறு கலப்படம் செய்யப்பட மாவு, ஆத்துாரில் இருந்து நாமக்கல் மாவட்டங் களுக்கு அதிக அளவில் கொண்டு வரப்பட்டது. மக்காச்சோளம் கலந்த ஜவ்வரிசியை மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் போன்ற வெளிமாநிலங்களுக்கு அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில், மரவள்ளிக் கிழங்கில் இருந்து தோல் உரித்த மக்காச்சோள மாவு மற்றும் எவ்வித ரசாயனமும் கலக்காமல் இயற்கையான முறையில் (ஆர்கானிக் சேகோ) தயாரிக்க முடிவு செய்த, ஜவ்வரிசி உற்பத்தி யாளர்கள், தமிழ்நாடு மரவள்ளி இயற்கை ஜவ்வரிசி உற்பத்தியாளர் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கத்தை துவக்கி உள்ளனர்.
நல்ல வரவேற்பு:அதன் தலைவர் முத்துலிங்கம் கூறியதாவது:ஜவ்வரிசி உற்பத்தியில், ஈரமாவு மற்றும் மக்காச்சோள மாவு ஆகியவற்றை கலந்து விற்பனை செய்து வந்தனர். அவற்றை, உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கட்டுப்படுத்தி உள்ளது. தற்போது, இயற்கை முறையில் ஜவ்வரிசி தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் கிடைத்ததை போல், தற்போது, ஜவ்வரிசி மற்றும் மரவள்ளிக் கிழங்குக்கு நல்ல விலை கிடைத்துள்ளது.
அதிக அளவில் சாகுபடி:இந்த மரவள்ளிக் கிழங்கு, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, திருச்சி மாவட்டம், பச்சமலை, சேலம் மாவட்டம் கருமந்துறை, வேலுார் மாவட்டம் ஜவ்வாதுமலை ஆகிய பகுதிகளில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.கடந்த, 10 நாட்களுக்கு முன், 400 ரூபாய்க்கு விற்ற, 75 கிலோ கொண்ட ஒரு மூட்டை மரவள்ளி கிழங்கு, தற்போது, 5,000க்கு விற்பனையாகின.
90 கிலோ கொண்டு ஒரு மூட்டை ஜவ்வரிசி, 7,355 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.வட மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் நவராத்திரி விழா, செப்டம்பர், 25ம் தேதி துவங்குகிறது. இதனால், ரசாயனம் கலக்காத இயற்கை முறையில் தயாரிக்கப் பட்ட, ஜவ்வரிசிக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.
மேலும் அதிகரிக்கும்:கடந்த சில மாதங்களாக அதிக அளவில் ஆலைகள் இயங்காமல் இருந்து இருந்தன. இந்நிலையில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, பெரும்பாலான ஜவ்வரிசி ஆலைகள் மும்முரமாக செயல்பட துவங்கியுள்ளன.
ஜவ்வரிசியில் கலப்பட ஈரமாவு கலந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு கிழங்குக்கு அதிக விலை கிடைக்கும் என்ற நிலை, தற்போது மாறி உள்ளது. அதேபோல், ஈர மாவு கலப்படம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால், மரவள்ளிக்கு கிழங்குக்கும் அதிக விலை கிடைத்து வருகிறது. இதன் விலை, வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Categories: DISTRICT-NEWS, Namakkal