Home > Chennai, DISTRICT-NEWS > சென்னை முத்தையால்பேட்டை தனியார் குடோனில் ரூ.4 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

சென்னை முத்தையால்பேட்டை தனியார் குடோனில் ரூ.4 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

10,September, 2014

ராயபுரம்,

சென்னை முத்தையால்பேட்டையில் உள்ள ஒரு தனியார் குடோனில் பதுக்கிய ரூ.4 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

சென்னை முத்தையால்பேட்டை பிராட்வே நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு முத்தையால்பேட்டை போலீசார் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தள்ளுவண்டியில் மூட்டைகளை ஏற்றி கொண்டு ஒருவர் சென்று கொண்டிருந்தார். சந்தேகத்தின்பேரில் அந்த வண்டியை மடக்கி போலீசார் சோதனை மேற்கொண்டதில் வண்டியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (ஹான்ஸ்) இருந்தது தெரியவந்தது. உடனடியாக தள்ளுவண்டியை கொண்டு வந்த அதே பகுதியை சேர்ந்த முத்து, ராஜேந்திரன் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், முத்தையால்பேட்டை சண்முகராயன் தெருவில் உள்ள ஒரு தனியார் குடோனில் சிலர் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சம்பவம் குறித்து போலீசார் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று காலை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சுந்தரராஜன், இளங்கோ, ஜெபராஜ், சிவசங்கர், ஜெயகோபால் மற்றும் முத்தையால்பேட்டை போலீசார் சண்முகராயன் தெருவில் இருந்த தனியார் குடோன்களில் சோதனை மேற்கொண்டனர்.

பறிமுதல்

அப்போது அங்கு விநாயகமூர்த்தி என்பவருக்கு சொந்தமான குடோனில் பதுக்கிய ரூ.3 லட்சம் மதிப்புள்ள 890 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் சிகரெட் பண்டல்களும், 500 கிலோ புகையிலையும் பறிமுதல் செய்யப்பட்டது. புகையிலை பொருட்களின் மாதிரியை அதிகாரிகள் சோதனைக்கு அனுப்பினர். இதைத் தொடர்ந்து அந்த குடோனுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, அதிகாரிகள் கொடுங்கையூர் மணலி நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கு பகுதிக்கு எடுத்து சென்று குழிதோண்டி புதைத்தனர். அழிக்கப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories: Chennai, DISTRICT-NEWS