Home > DISTRICT-NEWS, Salem > காலாவதியான 7 ஆயிரம் குளிர்பான பாட்டில்கள் அழிப்பு உணவு பாதுகாப்பு அதிகாரி நடவடிக்கை

காலாவதியான 7 ஆயிரம் குளிர்பான பாட்டில்கள் அழிப்பு உணவு பாதுகாப்பு அதிகாரி நடவடிக்கை

12,September, 2014

தலைவாசல் பகுதியில் பெட்டிக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி நடத்திய ஆய்வில் காலாவதியான 7 ஆயிரம் குளிர்பான பாட்டில்கள் அழிக்கப்பட்டன.
பெட்டிக்கடையில் ஆய்வு
சேலம் மாவட்டம் தலைவாசல், ஆறகளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் காலாவதியான குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதாவுக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் அவரது தலைமையில் தலைவாசல் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முனுசாமி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுந்தர்ராஜன், புஷ்பராஜ், கோவிந்தராஜ் ஆகியோர் தலைவாசல், ஆறகளூர் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது பெட்டிக்கடையில் காலாவதியான தேதிகளில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டு இருந்த குளிர்பான பாட்டில்களை அவர்கள் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினார்கள்.
7 ஆயிரம் பாட்டில்கள் அழிப்பு
இதையடுத்து தலைவாசல் அடுத்த பட்டுத்துறை ரோட்டில் உள்ள குளிர்பான குடோனில் ஆய்வு செய்தனர். அங்கு காலாவதியான குளிர்பான பாட்டில்களையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக குடோன் உரிமையாளர் கலையரசனுக்கு எச்சரிக்கை நோட்டீசு வழங்கப்பட்டது. இப்படி பெட்டிக்கடைகள் மற்றும் குடோனில் பறிமுதல் செய்யப்பட்ட 7 ஆயிரம் பாட்டில்களில் இருந்த குளிர்பானங்கள் கீழே கொட்டப்பட்டு அழிக்கப்பட்டன. குளிர்பான மொத்த வியாபாரி மற்றும் சில்லறை வியாபாரிகளின் விலை பட்டியலிலும், பாட்டில்களிலும் அந்த குளிர்பானங்களின் எண்கள், உற்பத்தி தேதி, காலாவதி தேதி ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் உணவு பாதுகாப்பு சட்டப்படி வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா எச்சரிக்கை விடுத்தார்.

Categories: DISTRICT-NEWS, Salem