Home > Chennai, DISTRICT-NEWS > போலி டீத்தூள்கள் பயன்படுத்துவதாக புகார்: சென்னை டீக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ‘திடீர்’ சோதனை 154 கிலோ டீத்தூள்கள் பறிமுதல்; கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை

போலி டீத்தூள்கள் பயன்படுத்துவதாக புகார்: சென்னை டீக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ‘திடீர்’ சோதனை 154 கிலோ டீத்தூள்கள் பறிமுதல்; கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை

12,September, 2014

சென்னை,

போலி டீத்தூள்கள் பயன்படுத்துவதாக கிடைத்த புகாரையடுத்து, சென்னையில் 84 டீக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

அதிகாரிகள் திடீர் சோதனை

சென்னை அண்ணாநகரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஒருசில டீக்கடைகளில் போலியான டீத்தூள் உபயோகிப்பதாக உணவுத்துறை அலுவலகத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் (சென்னை மாவட்டம்) டாக்டர் லட்சுமி நாராயணன் உத்தரவின்பேரில் அதிகாரிகள் சதாசிவம், ராஜா, சரண்யா, கஸ்தூரி ஆகியோர் கொண்டகுழு சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது பல டீக்கடைகளில் போலியான டீத்தூள்கள் உபயோகம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

84 டீக்கடைகளில் சோதனை

மொத்தம் 84 டீக்கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 154 கிலோ போலி டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த டீக்கடைகளில் தடையை மீறி விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 60 கிலோ பான் பராக் உள்ளிட்ட போதையூட்டும் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், காலாவதியான 100 ரஸ்னா குளிர்பான பாக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து டீக்கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இன்று அழிக்கப்படுகிறது

இதுகுறித்து உணவுப்பாதுகாப்பு அதிகாரி சதாசிவம் கூறியதாவது:–

போலி டீத்தூள்களை பயன்படுத்துவதால் வயிற்றுவலி, கல்லீரல் பாதிப்பு ஏற்படுவதோடு, புற்றுநோய்க்கான காரணியாகவும் அமைந்துவிடும் அபாயம் உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் கிடங்கில் கொட்டி அழிக்கப்பட இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Categories: Chennai, DISTRICT-NEWS
  1. JOYANTA POREL
    13,September, 2014 at 2:17 pm

    Dear Sir,

    I shall be grateful for an English translation of this article.

    Joyanta Porel

  1. No trackbacks yet.
Comments are closed.