Home > DISTRICT-NEWS, Salem > சேலம் மாவட்டத்தில் வெல்ல உற்பத்தி அடியோடு நிறுத்தம்

சேலம் மாவட்டத்தில் வெல்ல உற்பத்தி அடியோடு நிறுத்தம்

13,September, 2014

சேலம், செப். 13–

சேலம் மாவட்டத்தில் ஓமலூர், வட்டக்காடு, கருப்பூர், தேக்கம்பட்டி, காமலாபுரம், மூங்கில்பாடி, தீவட்டிப்பட்டி, தின்னப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெல்ல உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

இவர்கள் உற்பத்தி செய்யும் வெல்லத்தை செவ்வாய்ப்பேட்டை வெல்ல மண்டிக்கு கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்து வருகிறார்கள். இந்த வெல்லத்தை வெளி மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கடந்த சில நாட்களுக்கு முன்பு செவ்வாய்ப்பேட்டை பகுதியில் உள்ள வெல்ல வியாபார கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினார்.

அப்போது அங்கு விற்பனைக்கு வைத்திருந்த வெல்லத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் கூறப்பட்டு இருப்பதை விட அதிகளவில் ரசாயனம் கலந்து இருப்பதும், வெல்ல தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்தி இருப்பதாகவும் கூறி அவற்றை சோதனைக்கு எடுத்து சென்றார்.

இதையடுத்து வியாபாரிகள் வெல்லத்தை வாங்க மறுத்தனர். இதன் காரணமாக வெல்ல உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்தினர். உற்பத்தியாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரண்டு வந்து உணவு பாதுகாப்பு அதிகாரியுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினர்.

ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் வெல்லம் வரத்து அடியோடு நின்றது. வெல்ல மண்டிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. வரத்து நின்று விட்டதால் சேலம் மாவட்டத்தில் கடுமையான வெல்ல தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து சேலம் சில்லரை மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் பெரியசாமி கூறும் போது, அதிகாரிகளின் நடவடிக்கையால் வெல்ல உற்பத்தியாளர்கள் 2 வாரமாக உற்பத்தியை நிறுத்தி விட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் மளிகை கடைகளில் வெல்ல தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே விற்பனைக்காக வைத்திருந்த வெல்லம் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது. இனி மண்டிக்கு புது வெல்லம் வந்தால் மட்டுமே விற்பனை நடக்கும். எனவே அரசு இதில் தலையிட்டு மீண்டும் வெல்ல உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சேலம் செவ்வாய்ப்பேட்டையில் தினசரி காலையில் நடக்கும் வெல்ல ஏல மண்டியில் 150 முதல் 200 டன் வெல்லம் விற்பனை நடக்கும். இதனால் மண்டியில் தினந்தோறும் லட்சக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும். ஆனால் கடந்த 2 வாரமாக ஏலம் நடைபெறவில்லை.

Categories: DISTRICT-NEWS, Salem