Home > DISTRICT-NEWS, The Nilgiris > நீலகிரியில் விற்கப்படும் கலப்பட தேன்; சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை

நீலகிரியில் விற்கப்படும் கலப்பட தேன்; சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை

22,September, 2014

ஊட்டி : ‘சுற்றுலா பயணிகளை குறி வைக்கும் கலப்பட தேன் வியாபாரிகளிடம், உஷாராக இருக்க வேண்டும்’ என, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நீலகிரி, வால்பாறை, கொடைக்கானல் உட்பட பல இடங்களில், வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள், மரங்களில் உள்ள தேன் கூட்டில் இருந்து, நேரடியாக தேனை சேகரித்து, பாட்டிலில் அடைத்து விற்கின்றனர். கலப்படம் இல்லாத இந்த ஒரிஜினல் தேனுக்கு, மக்கள் மத்தியில் மவுசு அதிகம். இந்நிலையில், நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறி வைத்து, கலப்பட தேன் வியாபாரம் களைகட்டி வருகிறது. குறிப்பாக, கேரளா, கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள், ஊட்டி-கூடலுார் சாலை வழியாக ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். இச்சாலை நெடுகிலும் வியாபாரிகள், கலப்பட தேனை விற்கின்றனர். தங்கள் இரு சக்கர வாகனத்தின் பின்புறம் பெரிய பாத்திரத்தில், ஏற்கனவே சேகரித்து வைத்த தேன் கூட்டை நிரப்பி விடுகின்றனர். அதில் இருந்து சொட்டாக, சொட்டாக வடியும் தேனை, பாட்டிலில் நிரப்பி, ஒரு பாட்டில் 250 முதல்- 300 ரூபாய் வரை விற்கின்றனர்.
முற்றிலும் கலப்படம் : இந்த தேன், உடலுக்கு பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தக் கூடியது என்பது, அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்தது. நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி கூறுகையில், “நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் கருப்பட்டி, வெல்லத்தை தேனில் கலப்படம் செய்து, மாதக்கணக்கில் வைத்து சிலர் விற்கின்றனர்; அவர்களது தேன் பாத்திரத்தில், புழு, பூச்சிகள் கூட நெளிகின்றன. இந்த தேனை பருகுவதால், வயிற்றுப் போக்கு உட்பட பல பிரச்னைகள் ஏற்படும். எனவே, சுற்றுலா பயணிகள், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்றார்.