Home > DISTRICT-NEWS, Sivaganga > காரைக்குடி பேக்கரி ரஸ்கில் பல்லி சாப்பிட்டவர் வாந்தி,மயக்கம்: குடோனுக்கு சீல்

காரைக்குடி பேக்கரி ரஸ்கில் பல்லி சாப்பிட்டவர் வாந்தி,மயக்கம்: குடோனுக்கு சீல்

23,September, 2014

 

காரைக்குடி :காரைக்குடி சுப்பிரமணியபுரம் 7-வது வீதி தெற்கில் உள்ள, பெட்டிக்கடையில் வைக்கப்பட்டிருந்த பேக்கரி ரஸ்கில் பல்லி இருந்தது. சாப்பிட்ட பெண் ஒருவர் வாந்தி எடுத்தார். பேக்கரிக்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்த ரஸ்க்குகளை பறிமுதல் செய்து குடோனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூடினர்.காரைக்குடி சுப்பிரமணியபுரம் 7 வீதி தெற்கில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் அதே பகுதியை சேர்ந்த தேவி என்பவர் ரஸ்க் பாக்கெட் வாங்கியுள்ளார். அதை வீட்டில் வைத்து சாப்பிட்டபோது துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து வாந்தி எடுத்தார். உள்ளே பார்த்த போது பல்லி ஒன்று இறந்த நிலையில் காய்ந்து போயிருந்தது தெரிய வந்தது. அவர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டார்.அந்த பெண்ணின் தரப்பில், ஆம் ஆத்மி நகர ஒருங்கிணைப்பாளர் திருஞானம், கலெக்டர் ராஜாராமனுக்கு புகார் அனுப்பினார். கலெக்டர் உத்தரவின் பேரில், நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அந்த பெட்டிக்கடையில் உள்ள, தரமற்ற பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், ரஸ்க் தயாரிப்பு நிறுவனம், காரைக்குடியை சேர்ந்தது என்பதால், செஞ்சை மற்றும் ரஸ்தா சிட்கோ பகுதியில் உள்ள, அதன் தயாரிப்பு நிலையங்களில் ஆய்வு செய்தனர். இதில் பல்லி இருந்த பாக்கெட் ‘பேட்ச் எண்’ உள்ள ரஸ்க் பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.காலாவதி நிலையில் இருந்த மாவு மூடைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருள்நம்பி கூறும்போது: பெட்டிக்கடையில் வாங்கிய ரஸ்கை சாப்பிட்ட பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், ரஸ்க் தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டோம். 500-க்கும் மேற்பட்ட பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அந்த பாக்கெட்கள் அடங்கிய குடோனுக்கு சீல் வைத்துள்ளோம். மேலும் பல பேக்கரிகளை ஆய்வு செய்ய உள்ளோம், என்றார்.

Categories: DISTRICT-NEWS, Sivaganga