Home > NEWS > பயணிகளின் பர்ஸை சுரண்டும் நெடுஞ்சாலை மோட்டல்கள்: நடவடிக்கை எடுக்குமா அரசு?

பயணிகளின் பர்ஸை சுரண்டும் நெடுஞ்சாலை மோட்டல்கள்: நடவடிக்கை எடுக்குமா அரசு?

25,September, 2014

தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் அரசு விரைவுப் பேருந்துகளில் தான் பெரும்பாலான நேரங்களில் பயணம் செய்கின்றனர்.
அவ்வாறு செல்லும்போது நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள உணவகங்களில் பேருந்துகளை நிறுத்தும் டிரைவர்-கண்டக்டர்கள், பயணிகளை உணவருந்த சொல்லிவிட்டு அவர்களும் ஓட்டலுக்குள் புகுந்து விடுகின்றனர். ஆனால், அந்த ஓட்டல்களில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் தரத்திற்கும் விலைக்கும் சம்பந்தமே இருப்பதில்லை.
சில உணவுகள் தரமில்லாதபோதும் அதன் விலையோ மிக அதிகமாக இருக்கும். குளிர்பானங்கள், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட தாறுமாறாக உயர்த்தி விற்கின்றனர். உணவகத்தில் சுகாதார வசதிகள் கூட முறையாக செய்யப்படுவதில்லை. மழை பெய்துவிட்டால் போதும், பயணிகள் பேருந்திலிருந்து இறங்க முடியாத அளவுக்கு சேறும் சகதியுமாக இருக்கும். உணவருந்த பிடிக்காமல் பேருந்திலேயே உட்கார்ந்திருந்தால், வெளியில் இருந்து வரும் சிறுநீர் நாற்றம் குடலைப் புரட்டும்.
மனம் போன போக்கில் மோட்டல் உரிமையாளர்கள் செயல்பட்டு வருவதால், சுகாதாரத்துறை மற்றும் உணவுத் துறை அதிகாரிகள் மோட்டல்களுக்கு விசிட் செய்து சுகாதார வசதியை ஆய்வு செய்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது.
மோட்டல்களில் உணவருந்தும் பயணிகள் பலர் தங்கள் ஊருக்கு சென்றவுடன் புட் பாய்சன் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்கு உள்ளாகின்றனர். இப்படித்தான் சில வருடங்களுக்கு முன் நெய்வேலியை சேர்ந்த ஒருவர் நெடுஞ்சாலை உணவகத்தில் சாப்பிட்டதால் தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், தான் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு பின்னர் உயிர் பிழைத்ததாகவும் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் அவருக்கு நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அதன் பின்பும் காட்சிகள் மாறவில்லை. ஒரு சாதா தோசை 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தப்பித் தவறி பசியெடுக்கிறது என்று விலையைக் கேட்காமல் உணவருந்த நுழைந்து விட்டால் பர்சிலிருந்து குறைந்தது 150 ரூபாய் காலியாகிவிடும். குடும்பத்தினரோடு உணவருந்த சென்றால் கண்டிப்பாக அவரது பர்சிலுள்ள பணம் முழுவதுமே காணாமல் போய்விடும். பயணிகளின் வயிற்றை நிரப்புவதாக கூறி அவர்களின் வயிற்றெரிச்சலைத்தான் வாங்கி கட்டிக்கொள்கின்றனர்.
மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் ஓட்டல்கள் மட்டுமின்றி கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை உணவகங்களில் இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்பின்னரும், உணவகங்கள் மீது பயணிகளின் அளிக்கும் புகார்கள் குறைந்தபாடில்லை.
இனியாவது தமிழக அரசு, இவ்வாறு செயல்படும் மோட்டல்களின் மீது கடும் நடவடிக்கை எடுத்து, தரமான உணவுகளை நியாயமான விலையில் விற்பனை செய்ய வழிவகை செய்யவேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.

Categories: NEWS
  1. 25,September, 2014 at 7:26 pm

    Endangered reptiles in menu – Forest Dept. raids two eateries – http://wp.me/p2HDZg-4tB

  1. No trackbacks yet.
Comments are closed.