Home > DISTRICT-NEWS, Erode > அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க ரூ.1½ லட்சம் கேட்டு மிரட்டிய அ.தி.மு.க. பிரமுகர் கைது-தினத்தந்தி செய்தி

அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க ரூ.1½ லட்சம் கேட்டு மிரட்டிய அ.தி.மு.க. பிரமுகர் கைது-தினத்தந்தி செய்தி

26,September, 2014

ஈரோட்டில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க, சிப்ஸ் நிறுவன உரிமையாளரிடம் ரூ.1½ லட்சம் கேட்டு மிரட்டிய அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து கூறப்படுவதாவது:-
சிப்ஸ் நிறுவனம்
கேரள மாநிலம் பாலக்காடு ஸ்ரீதேவி-சிவாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவருடைய மகன் முரளி கிருஷ்ணன். இவர் கோவையில் சிப்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். இவருடைய சிப்ஸ் நிறுவனம் ஈரோடு அருகே உள்ள முள்ளாம்பரப்பு பகுதியிலும் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் சிப்ஸ்கள் தரமில்லாதவையாகவும் சுகாதாரமற்றவையாகவும் இருப்பதாக ஈரோடு மாவட்ட உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் அதிரடி சோதனை செய்தனர். இதில் அந்த நிறுவன சிப்ஸ் சுகாதாரமற்றவை என்பது கண்டுபிடிக்கப்பட்டதால் கடந்த 18-ந் தேதி சிப்ஸ் நிறுவனத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அ.தி.மு.க. பிரமுகர்
இந்தநிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் வரகப்பாவீதியை சேர்ந்த மைதீன் என்பவருடைய மகன் பர்மான் உல்லா என்கிற பயர் பர்மான் (வயது 37) முரளி கிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், ‘ஈரோடு மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் பலரை தனக்கு நன்றாக தெரியும். உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் லஞ்சமாக பணம் கொடுத்து வழக்கு இல்லாமல் செய்து விடுகிறேன். மீண்டும் சிப்ஸ் நிறுவனத்தை திறக்க ஏற்பாடு செய்து தருகிறேன்‘ என்று கூறினார்.
பயர் பர்மான், ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளராக உள்ளார். எனவே அவரது பதவியை வைத்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு வழக்கு இல்லாமல் செய்து விடுவார் என்று முரளி கிருஷ்ணன் நம்பினார்.
கொலை மிரட்டல்
இதைத்தொடர்ந்து பயர் பர்மானை மீண்டும் முரளிகிருஷ்ணன் தொடர்பு கொண்டார். அப்போது அவர், ‘ரூ.3 லட்சம் வேண்டும்‘ என்று கேட்டு உள்ளார். ஆனால், அவ்வளவு தொகை தரமுடியாது என்று முரளி கிருஷ்ணன் மறுத்து உள்ளார். பின்னர் பேரம் பேசி ரூ.1½ லட்சம் வழங்குவதாக முரளி கிருஷ்ணன் கூறினார். இதற்கு சம்மதித்த அவர், ‘ஈரோடு வ.உ.சி. பூங்கா அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு பணம் கொண்டு வாருங்கள்‘ என்று கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் முரளி கிருஷ்ணன் தன்னுடன் வேறு சிலரையும் ஓட்டலுக்கு அழைத்து வந்து பயர் பர்மானுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவர் ரூ.1½ லட்சத்தை ஏமாற்றி மோசடி செய்ய இருப்பதை அவர்கள் தெரிந்து கொண்டனர். எனவே பணத்தை கொடுக்க மறுத்தனர். இதனால் பயர் பர்மான் ஆத்திரம் அடைந்து முரளி கிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
கைது
இதுபற்றி முரளி கிருஷ்ணன் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பயர் பர்மானை பிடித்து விசாரணை நடத்தி கைது செய்தனர்.
ஈரோட்டில் அதிகாரிகள் பெயரில் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரே பணம் கேட்டு மோசடி செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories: DISTRICT-NEWS, Erode