Home > DISTRICT-NEWS, Salem > உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தக் கோரிக்கை

உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தக் கோரிக்கை

26,September, 2014

சேலம் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று நுகர்வோர் நலக் குழு வலியுறுத்தியது.

சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரியின் குடிமக்கள் நுகர்வோர் மன்றம், நுகர்வோர் நலக் குழு ஆகியவற்றின் சார்பில் நுகர்வோர் உரிமைகள் கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உதவிப் பேராசிரியர் என்.சுபா வரவேற்றார். நுகர்வோர் நலக் குழுத் தலைவர் ஏ.அசோகன் தலைமை வகித்தார். முதல்வர் எஸ்.மணிமொழி முன்னிலை வகித்தார்.

கருத்தரங்கை மருத்துவர் ஆர்.ரமேஷ் சங்கர் தொடக்கி வைத்தார். நுகர்வோர் நலக் குழு நிர்வாகிகள் எஸ்.அனந்தகிருஷ்ணன், எஸ்.ஏகாம்பரம், ஏ.மோகனசுந்தரம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இந்தக் கருத்தரங்கின் முடிவில், ஆம்னி பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்கவும், கட்டுப்படுத்தவும் அரசு சார்பில் பொது பயன்பாட்டுத் துறை அமைக்க வேண்டும். நாற்கர சாலைகளில் வசூலிக்கப்படும் டோல்கேட் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதுடன், செலுத்தப்படும் கட்டணத்துக்கு உரிய சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மரபணு மாற்ற உணவுப் பொருள் உற்பத்தி செய்யும் சோதனை முறையை உடனடியாகக் கைவிட வேண்டும்.

இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தரம், வசதிகள் இல்லாத பள்ளிகளை ஆய்வு செய்து அதன் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும், ரயில்களில் எலித் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Categories: DISTRICT-NEWS, Salem