Home > DISTRICT-NEWS, Villupuram > ஜவ்வரிசி உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு மேலாண் இயக்குநர் சாந்தா எச்சரிக்கை

ஜவ்வரிசி உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு மேலாண் இயக்குநர் சாந்தா எச்சரிக்கை

1,October, 2014

விழுப்புரம்: ஜவ்வரிசி உற்பத்தியில் வேதி பொருட்கள் கலப்படத்தை தடை செய்தல் சம்பந்தமான ஆய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. ஜவ்வரிசி உற்பத்தியில் வேதி பொருள் (கெமிக்கல்) கலப்படத்தை தடை செய்தல் மற்றும் தரமான ஜவ்வரிசி தயாரித்தல் குறித்து தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஆய்வுக் கூட்டம், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். ஜவ்வரிசி தொழிற்சாலை கூட்டுறவு சங்க மேலாண் இயக்குநர் சாந்தா முன்னிலை வகித்து பேசியதாவது : விழுப்புரம் மாவட்டத்தில் 6 ஜவ்வரிசி தொழிற்சாலைகள் சின்னசேலம் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் ஜவ்வரிசி தரமானதாக உற்பத்தி செய்ய வேண்டும். இவர்கள் உரிமம் பெறாமல் செயல்பட கூடாது. இந்த தொழிற்சாலைகள் மரவள்ளி கிழங்கு முதலில் தோல் உரித்தும், அடுத்து சுத்தமான தண்ணீரில் சுத்தம் செய்தும், மாவை அரைத்து தயார் செய்ய வேண்டும். சில தொழிற்சாலைகள் வேதி பொருட்கள் பயன்படுத்தி சுத்தம் செய்கின்றனர். இதனால் மனிதர்களுக்கு நோய் ஏற்படுகிறது. ஜவ்வரிசி தயாரிக்க குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஈர மாவுகளை வாங்கி வியாபாரிகள் விற்பனை செய்ய கூடாது. இந்த விதிமுறைகள் மீறி ஜவ்வரிசி தயார் செய்யும் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டால், உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். கெமிக்கல் பொருள் கலந்து ஜவ்வரிசி தயார் செய்வது ஆய்வில் கண்டறியப்பட்டால் தொழிற்சாலை உரிமையாளருக்கு 7 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்கும். இவ்வாறு மேலாண் இயக்குநர் சாந்தா தெரிவித்தார். இதில், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் குணசேகர், மாவட்ட தொழிற்மைய மேலாளர் மகாலிங்கம், உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ஆறுமுகம், வழங்கல் அலுவலர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Categories: DISTRICT-NEWS, Villupuram