Home > Dindigul, DISTRICT-NEWS > திண்டுக்கல் பகுதியில் – தடை செய்யப்பட்ட புகையிலை – பொருட்கள் தாராள விற்பனை

திண்டுக்கல் பகுதியில் – தடை செய்யப்பட்ட புகையிலை – பொருட்கள் தாராள விற்பனை

3,October, 2014

திண்டுக்கல், அக். 2:

திண்டுக்கலில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தாரளமாக விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, பான் மசாலா மற்றும் பாக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் திண்டுக்கல்லில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதால், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தடையின்றி நடந்து வருகிறது.

பள்ளி, கல்லூரிகளின் மாணவர்களும் இந்த புகையிலை பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட், நாகல் நகர், சன்னதி தெரு, சத்திரம் தெரு, ரவுண்டு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள டீக்கடைகள், பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் ஒளிவு மறைவின்றி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் சுப்பிரமணி கூறுகையில், �திண்டுக்கல் நகரில் மட்டுமல்லாது, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தாரளமாக விற்பனை செய்யப்படுகின்றன. நாங்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் புகார் கொடுத்துள்ளோம்.

பெயருக்கு பெட்டி கடைகள், டீக்கடைகளில் சோதனை செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். ஆனால் இந்த கடைகளுக்கு இவற்றை சப்ளை செய்யும் மொத்த வியாபாரிகளின் குடோன்கள் மற்றும் ஏஜென்சிகளில் சென்று சோதனை செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும். கடும் நடவடிக்கை மூலம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை ஒழிக்க வேண்டும்� என்றார்.

Categories: Dindigul, DISTRICT-NEWS