Home > DISTRICT-NEWS, Salem > தீபாவளி பலகாரம் தயாரிப்பவர்கள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்

தீபாவளி பலகாரம் தயாரிப்பவர்கள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்

5,October, 2014

சேலம்: தீபாவளி பண்டிகையை ஒட்டி ஸ்வீட் கடைகள், திருமண மண்டபம் உள்பட வெளியிடங்களில் பலகாரங்கள் தயாரிப்பதற்கு உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். என்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை அக்டோபர் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஸ்வீட் கடைகளிலும், சிறப்பு பலகார கடைகளிலும் விற்பனைக்கு வரும் தீபாவளி இனிப்பு வகைகள் சுத்தமாகவும், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்படவுள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை சேலம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறியதாவது: தீபாவளி பண்டிகையையொட்டி கடைகள், மண்டபங்களில் இனிப்பு, காரம் வகைகள் தயாரிப்பவர்கள் கண்டிப்பாக சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து இருக்கவேண்டும். பதிவு செய்யாமல் பண்டிகை கால இனிப்பு, கார வகைகள் தயாரிக்கக்கூடாது.
பதிவு செய்யாமல் தயாரிப்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். தயாரிக்கப்படும் பொருட்கள் எந்த தேதியில் தயாரிக்கப்பட்டது என்பது குறித்து தகவல் கட்டாயம் அந்த பேக்கிங்கில் இருக்கவேண்டும். இனிப்பு, கார வகைகள் சுகாதாரமாக தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய சேலம் மாநகரத்தில் 6 குழுக்கள் அமைக்கப்பட வுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 4 அதிகாரிகள் இருப்பார்கள். இதேபோல் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்படவுள்ளது. ஆய்வின்போது இனிப்பு வகைகளில் ஏதாவது கலப்படம் கலக்கப்பட்டு இருப்பது தெரியவந்தால், அந்த உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்படும். இந்த ஆய்வு அக்டோபர் 10ம் தேதியில் இருந்து துவங்கி, தீபாவளி பண்டிகை வரை நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Categories: DISTRICT-NEWS, Salem
  1. 6,October, 2014 at 7:28 am

    பதிவு செய்யாதவர் மீது நடவடிக்கை சட்ட பூர்வமான நடவடிக்கை தேவை

  1. No trackbacks yet.
Comments are closed.