Home > Coimbatore, DISTRICT-NEWS > தீபாவளியை முன்னிட்டு பலகார கடைகளில் சோதனை : உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு

தீபாவளியை முன்னிட்டு பலகார கடைகளில் சோதனை : உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு

7,October, 2014

கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஸ்வீட் ஸ்டால்களில் இன்று முதல் சோதனை நடத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கோவை உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் கதிரவன் கூறியதாவது: தீபாவளிக்கு இன்னும் இரு வாரங்களே உள்ளன. இந்நிலையில் இனிப்பு வகைகள் மற்றும் அதை தயாரிக்கும் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட நிறங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இனிப்புகள் தயாரிக்க வனஸ்பதி, நெய் பயன்படுத்தினால், அதுகுறித்து கடையில் போர்டு வைக்க வேண்டும். பால் மூலம் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை மூன்று நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கக் கூடாது. அடைக்கப்பட்ட எண்ணெய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிற எண்ணெய்களை பயன்படுத்தக் கூடாது. மேலும், இனிப்பு வகைகளை தயாரிக்க ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எண்ணெய் உபயோகிக்கக் கூடாது. இனிப்பு வகை தயாரிக்க உதவும் கடலைமாவு உள்ளிட்ட பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும். பெங்காலி வகை இனிப்புகளை தனியாக வைக்க வேண்டும். இனிப்புகளை மூட, உணவுக்கு பயன்படும் ‘சில்வர் பாய்ல்’களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இனிப்புகளில் 100 பி.பி.எம்., அளவு வரை வண்ணங்கள் சேர்த்துக் கொள்ளலாம். இத்தகவல்கள் அனைத்தும், இனிப்பகங்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு கடந்த ஆண்டில் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டன. இனிப்பகங்கள், இனிப்பு தயாரிப்பு நிறுவனங்கள் இந்த அளவுகளை பின்பற்றுகிறார்களா என்பது குறித்து இன்று முதல் அனைத்து ஸ்வீட் ஸ்டால்களிலும் சோதனை மேற்கொள்ளப்படும். தொடர்ந்து நான்கு நாட்களுக்கு சோதனை நடக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Categories: Coimbatore, DISTRICT-NEWS