Home > NEWS > சூப்பர் மார்க்கெட் கடைகளில் காலாவதி பொருட்கள் விற்பனை

சூப்பர் மார்க்கெட் கடைகளில் காலாவதி பொருட்கள் விற்பனை

12,October, 2014

நாட்டின் முன்னணி, மெகா சூப்பர் மார்க்கெட் கடைகளில், காலாவதியான பொருட்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அந்த பொருட்களின் மீது ஒட்டப்பட்டிருக்கும், காலாவதி தேதி ஸ்டிக்கர் அகற்றப்பட்டு, போலியாக தயாரிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர்.இதுகுறித்து, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த, தகவல் பெறும் உரிமை ஆர்வலர், அனுபம் குப்தா என்பவர் கூறுவதாவது:

பெரிய நகரங்களில் இயங்கும், முன்னணி சில்லரை வர்த்தக சூப்பர் மார்க்கெட் கடைகளில், இந்த முறைகேடு பெரிய அளவில் நடக்கிறது. அது தொடர்பாக, பல மனுக்களை தகவல் கமிஷனுக்கு அனுப்பியும், அந்த நிறுவனங்கள் மீது, மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை; அந்த நிறுவனங்களும் அரசுக்கு பயப்படுவதில்லை.

காலாவதி தேதி என, குறிப்பிடப்பட்டுள்ள தேதியை கொண்ட ஸ்டிக்கரை அகற்றி விட்டு, பல மாதங்கள் பின் தேதியிட்டு தயாரிக்கப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டி, தங்கள் கைவசம் உள்ள அனைத்து பொருட்களையும் விற்று தீர்க்கின்றன. குறிப்பாக, பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறு, பிஸ்கட், சாக்லெட், எண்ணெய் போன்றவற்றை, இவ்வாறு மோசடியாக விற்பனை

செய்கின்றன; இவர்களை தடுக்க யாரும் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

இதுகுறித்து, சில்லரை விற்பனை கடை நடத்தி வரும் ஒருவர் கூறியதாவது:

எங்களைப் போன்ற சிறிய அளவில் கடை நடத்துபவர்களிடம், காலாவதியாகும் பொருட்களை, அந்தந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் திருப்பி வாங்கிச் சென்று விடுவர். அதனால், எங்களிடம் காலாவதி பொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

ஆனால், மிகப்பெரிய சில்லரை விற்பனை நிறுவனங்கள், மொத்தமாக இந்த பொருட்களை வாங்கும் போது, வழக்கமான விலையை விட, மிகக் குறைந்த விலைக்கு வாங்குகின்றன.

அவ்வாறு, விலை குறைவாக, பெரிய சூப்பர் மார்க்கெட் நிறுவனங்களுக்கு விற்கப்படும் பொருட்கள் காலாவதியானால், அந்தப் பொருட்களை, தயாரிப்பு நிறுவனங்கள் திரும்ப

வாங்குவதில்லை. இதனால் தான், பெரிய அளவிலான சில்லரை விற்பனை நிறுவனங்கள் நடத்தும் சூப்பர் மார்க்கெட்டுகளில், காலாவதியான பொருட்கள் ஸ்டிக்கர் கிழிக்கப்பட்டு, பின் தேதியிட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

Categories: NEWS