Home > NEWS > கனவு ஆகிறதா உணவு -இன்று உலக உணவு தினம்

கனவு ஆகிறதா உணவு -இன்று உலக உணவு தினம்

16,October, 2014

உலகில் அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்.,16ம் தேதி உலக உணவு தினம் கிடைக்கப்படுகிறது. "குடும்ப விவசாயம் : உலகுக்கு உணவளிப்போம், பூமியை காப்போம்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.

அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டியது மனித உரிமையாக கருதப்படுகிறது. வசதி வாய்ப்பற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க வேண்டியது அரசின் கடமை என்கிறது ஐ.நா., சபை. இதை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.

மக்களின் தற்போதைய வாழ்க்கை முறையினால், உணவுப் பழக்க வழக்கமும் மாறியுள்ளது. நம் முன்னோர்கள் பயிரிட்ட பல உணவுப் பொருட்கள், இன்றைய தலைமுறையினர் சாப்பிட விரும்புவதில்லை. விரும்பினாலும் அந்த உணவுப்பொருட்கள் தற்போது கிடைப்பதில்லை. இதை இன்றைய தலைமுறையினர் இன்டெர்நெட்டில் படமாக பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு காரணம் உணவுப்பொருள் உற்பத்தியின் அளவு குறைகிறது. மக்களுக்கு விவசாயம் மீது ஆர்வம் குறைகிறது. முன்பெல்லாம் உலகுக்கே உணவளிக்கும் விவசாயிகளின் மீது மரியாதை இருந்தது. தற்போதைய கால மாற்றத்தில் விவசாயிகளின் நிலை பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது. வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இன்றைய தலைமுறையினருக்கு விவசாயம் மீது ஆர்வமே இல்லை. மக்களின் கையில் பணம் இருந்தாலும் உணவு உற்பத்தி அதிகரித்தால் தான் எதிர்காலத்தில் அனைவருக்கும் உணவு கிடைக்கும்.

பட்டினி எங்கு அதிகம் : உலகில் 80 கோடிப் பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக மக்கள் தொகையில் 11 சதவீதம். அதிகபட்சமாக ஆப்ரிக்காவில் தான் 20 சதவீதம் பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த இடத்தில் ஆசியா (12 சதவீதம்) உள்ளது. ஆண்டுதோறும் பட்டினியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 50 லட்சத்துக்கும் அதிகம். இந்த எண்ணிக்கையை பாதியாக குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டும், பட்டினி மரணங்கள் அதிகரித்து வருகின்றன.

வளரும் நாடுகளில் நிலவும் விலைவாசி உயர்வால் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஏழைகளுக்கு மூன்று வேளை உணவு என்பது கடினமான விஷயமாகிறது.

Categories: NEWS