Home > NEWS > உணவு பாதுகாப்பு சட்டத்தில் 2 விதிமுறைகளை நீக்கக்கோரி வணிகர் சங்க பேரமைப்பு சென்னையில் 31–ந்தேதி ஆர்ப்பாட்டம்

உணவு பாதுகாப்பு சட்டத்தில் 2 விதிமுறைகளை நீக்கக்கோரி வணிகர் சங்க பேரமைப்பு சென்னையில் 31–ந்தேதி ஆர்ப்பாட்டம்

17,October, 2014

புதுடெல்லி,

உணவு பாதுகாப்பு சட்டத்தில் 2 விதிமுறைகளை நீக்கக்கோரி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு 31–ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று அதன் தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

டெல்லியில் கலந்தாய்வு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநில நிர்வாகிகளும் டெல்லியில் ஒன்றுகூடி வணிகர்கள் சந்தித்து வரும் பல்வேறு ஆபத்துகள் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.

குறிப்பாக இப்போது சில்லரை வணிகத்தில் கால் பதித்துள்ள ஆன்–லைன் வர்த்தகத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டம் தொடர்பான விதிகளை மாற்றி அமைத்த பிறகுதான் இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை மத்திய அரசு முறையாக தெளிவுபடுத்தி வருகிறது.

சென்னையில் ஆர்ப்பாட்டம்

ஆனால் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மிகவும் மோசமாக நடந்து வருகின்றனர். ஆய்வு என்ற பெயரில் கடை, கடையாகச் சென்று வணிகர்களை அச்சுறுத்தி வருகின்றனர். உங்கள் மீது வழக்குகளை பதிவு செய்வோம். இரண்டரை லட்ச ரூபாய் நீங்கள் அபராதமாக கட்ட வேண்டி வரும் என்று அச்சுறுத்துகிறார்கள்.

எனவே, அந்த சட்டத்தில் 2 விதிமுறைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் அக்டோபர் 31–ந்தேதி மாநிலம் தழுவிய அளவில் அறப்போராட்டத்தை தொடங்க இருக்கிறோம். சென்னையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.

டெல்லியில் பேரணி

அதேபோன்று டிசம்பர் 18–ந்தேதி டெல்லியில் மாபெரும் பேரணி நடத்த இருக்கிறோம். சில்லரை வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவிகள் பெற்றுத்தரும் நோக்கத்தில் முரளிமனோகர் ஜோஷி தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியின் வழியாக சாமான்யமான வணிகர்களுக்கு கடன் உதவிகளைப் பெற்றுத்தரும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் வகையில் டெல்லி பேரணியில் கோரிக்கைகளை முன்வைப்போம்.

இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.

Categories: NEWS