Home > NEWS > ஓமலூர் பகுதியில் 4 ஆலைகளுக்கு "சீல்’

ஓமலூர் பகுதியில் 4 ஆலைகளுக்கு "சீல்’

17,October, 2014
சேலம் மாவட்டம், ஓமலூரில் ரசாயனப் பொருள்களை பயன்படுத்தி வெல்லம் தயாரித்ததாக நான்கு ஆலைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் "சீல்’ வைத்தனர். ஓமலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான காமலாபுரம், பொட்டியபுரம், கருப்பூர், தின்ன

சேலம் மாவட்டம், ஓமலூரில் ரசாயனப் பொருள்களை பயன்படுத்தி வெல்லம் தயாரித்ததாக நான்கு ஆலைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் "சீல்’ வைத்தனர்.

ஓமலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான காமலாபுரம், பொட்டியபுரம், கருப்பூர், தின்னப்பட்டி, வட்டக்காடு, தேக்கம்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் உள்ளன.

இந்த ஆலைகளில் சர்க்கரையைக் கொண்டு வெல்லம் தயாரிப்பதாகவும், உணவுப் பொருள்களில் தடை செய்யப்பட்ட பல்வேறு ரசாயனப் பொருள்களை கலப்பதாகவும், சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையிலான அதிகாரிகள் ஓமலூர் பகுதியில் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஓமலூர் வட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வெல்லத் தயாரிப்பு ஆலைகளில் ஆய்வுகள் செய்தனர். இதில் வெல்லம் வெண்மை நிறமாக வருவதற்கு, வயலுக்குப் பயன்படுத்தப்படும் சூப்பர் பாஸ்பேட் உரம், சபோலைட் போன்றவற்றை பயன்படுத்தி வருவது தெரிய வந்தது.

மேலும், கரும்புச் சாறில், பாதி அளவுக்கு சர்க்கரையைப் பயன்படுத்தி வெல்லம் உற்பத்தி செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் வெல்லம் தயாரித்த நான்கு ஆலைகளில் உற்பத்திக்கு தடை விதித்து "சீல்’ வைக்கப்பட்டது.

மேலும், ஆலைகளில் வைக்கப்பட்டிருந்த சூப்பர் பாஸ்பேட், சபோலைட் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து அழித்தனர். இதுபோன்ற பொருள்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் வெல்லத்தை பயன்படுத்தும் போது மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் என்று உணவுப் பாதுகாப்பு அலுவலர் அனுராதா தெரிவித்தார்.

ஓமலூர் வட்டத்தில் அனைத்து ஆலைகளையும் ஆய்வு செய்த அலுவலர்கள் 20 ஆலைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். இதையும் மீறி மக்கள் பயன்படுத்தும் உணவுப் பொருள்களில் கலப்படம் செய்து தயாரித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

Categories: NEWS