Home > DISTRICT-NEWS, Krishnagiri > காலாவதி பொருட்கள் தீ வைத்து அழிப்பு

காலாவதி பொருட்கள் தீ வைத்து அழிப்பு

19,October, 2014

கிருஷ்ணகிரி : போச்சம்பள்ளியில், காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தீ வைத்து அழிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், காலாவதியான மற்றும் கெட்டுப்போன உணவு பொருட்களை சில வியாபாரிகள் பாமர மக்களிடம் விற்பனை செய்வதாகவும் வந்த புகாரின் பேரில், உரிய நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் ராஜேஷ் உத்தரவிட்டார்.போச்சம்பள்ளி, மத்தூர் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் ஹோட்டல்களில் சோதனை நடத்தினர். உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் கலைவாணி தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோவன், ஸ்டாலின், சேகர் மற்றும் ராஜசேகர் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர். இதில், தடைசெய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்களும், காலாவதியான மசாலா பாக்கெட்டுகள், கடுகு, மிளகு போன்ற மளிகைப்பொருட்களை பறிமுதல் செய்து, தரையில் கொட்டி, தீ வைத்து அழித்தனர்.

Categories: DISTRICT-NEWS, Krishnagiri