Home > NEWS > சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை

சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை

21,October, 2014

க்களை புகையிலை பழக்கத்தில் இருந்து விடுவிக்க மத்திய, மாநில அரசாங்கங்களும், தொண்டு நிறுவனங்களும் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டாலும், எதிர்பார்க்கும் பலன்கள் இன்னும் கிடைத்தபாடில்லை. சினிமா காட்சிகளில் சிகரெட் புகைப்பது போன்ற காட்சிகளில்கூட சிகரெட்டின் தீமையை விளக்கும் ‘புகைப்பழக்கம் உயிருக்கு கேடு’ என்பதுபோன்ற வாசகங்கள் போடப்படவேண்டும் என்று உத்தரவு வந்தபிறகு, பல படங்களில் இத்தகைய காட்சிகள் இப்போது எடுக்கப்படவில்லை. கதாநாயகர்கள்கூட இப்போது பெரும்பாலும் அதுபோன்ற காட்சிகளில் நடிப்பதில்லை. என்றாலும், அகில இந்திய அளவில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளும், தமிழ்நாடு பற்றிய ஆய்வு முடிவுகளும் கவலை அளிப்பதாகவே அமைந்துள்ளன. 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 16 சதவீதம்பேர் புகையிலையை பயன்படுத்துகிறார்கள் என்று அகில இந்திய ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியா முழுவதிலும் 27 கோடியே 50 லட்சம் மக்கள் புகையிலை பழக்கத்துக்கு அடிமையாக இருக்கிறார்கள். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களில்
40 சதவீதம் பேர்கள் புகையிலையை ஏதாவது ஒரு வழியில் பயன்படுத்துபவர்கள்.  புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் இதயநோய், புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழக மக்கள் ஆண்டுதோறும் ரூ.1,171 கோடி செலவழிக்கிறார்கள்.

மக்களிடம் புகையிலை பயன்படுத்தும் பழக்கத்தை ஒழிக்க, தமிழ்நாட்டில் மிக தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டத்தின்கீழ் பான் மசாலா, குட்கா போன்ற வாயிலிட்டு மெல்லும் புகையிலை உற்பத்தி, இருப்பு வைத்திருத்தல், அதை பயன்படுத்துதல் போன்றவை ஏற்கனவே சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல, 2003–ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் சட்டத்தின் அடிப்படையில், பொதுஇடங்களில் புகைபிடிப்பது தடை செய்யப்படவேண்டும். புகையிலை பொருட்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ விளம்பரம் செய்வதை தடை செய்யவேண்டும்.
18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. இதெல்லாம் சட்டத்தில் இருக்கிறது என்றாலும், எல்லாமே ஏட்டளவில்தான் இருக்கிறது. செவ்வனே அமல் நடத்தப்படவில்லை.
இதில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தவேண்டும். இதுபோல, இப்போது சிகரெட் பாக்கெட்டுகளில் ‘புகைப்பழக்கம் உடல்நலத்துக்கு தீங்கானது’ என்ற எச்சரிக்கை வாசகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. ஆனால்,இது ஆங்கிலத்தில் மட்டும் இருப்பதால், இதனால் யாருக்கும் பெரியஅளவில் புகைபிடிப்பதற்கு ஒரு பயத்தை  ஏற்படுத்திவிடவில்லை.  பதவி ஏற்றதில்  இருந்தே புகைப்பழக்கத்துக்கு எதிராக ஒரு போரையே நடத்திவரும் மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ் வர்தன், இப்போது தன் அமைச்சகத்தின் மூலம் ஒரு அறிவிக்கையை வெளியிட்டு, அது கெஜட்டிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இனி அனைத்து சிகரெட் பாக்கெட்டுகளிலும் இருபக்கங்களிலும்  ஏதோ ஒப்புக்காக இல்லாமல்,  85 சதவீத இடங்களில் இத்தகைய எச்சரிக்கை இடம்பெற வேண்டும், இதில் 60 சதவீத இடத்தில் புகைப்பழக்கம் ‘தொண்டை புற்றுநோய்’ ஏற்படுத்தும் அபாய படம் இடம் பெற வேண்டும். 25 சதவீத இடம் அந்த படத்துக்கு கீழ் வாசகங்களாக பயன்படுத்தப்படவேண்டும். இந்த வாசகம் ஆங்கிலம், இந்தி அல்லது ஏதாவது இந்திய மொழியில் இருக்கவேண்டும் என்பதுதான் சற்று இடிக்கிறது. இந்தி அல்லது ஏதாவது இந்திய மொழி என்பதற்கு பதிலாக, எந்த மாநிலத்தில் அந்த சிகரெட் பாக்கெட் விற்கப்படுகிறதோ, அந்த மாநில தாய்மொழியில் எச்சரிக்கை வாசகங்கள் இருக்கவேண்டும் என்று உத்தர விடவேண்டும். அப்படிப்பட்ட உத்தரவு இருந்தால்தான், தமிழ்நாட்டில் விற்கப்படும் சிகரெட் பாக்கெட்டுகளில் பாமரனுக்கும் எச்சரிக்கை விடுக்கமுடியும். அரசு என்ன நோக்கத்தில் இந்த நடவடிக்கைகளை  எடுக்கிறதோ, அந்த செய்தி மக்களை போய் சென்றடைய வேண்டுமானால், தமிழில் நிச்சயமாக எச்சரிக்கை வாசகங்கள் வேண்டும். அடுத்த ஆண்டு ஏப்ரல் 1–ந் தேதி முதல் தான் இந்த விதி அமலுக்கு வருவதால், அதற்கு முன்பு இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசும், எம்.பி.க்களும் எடுக்கவேண்டும். மொத்தத்தில், புகையிலை இல்லாத இந்தியாவை உருவாக்கினால், புற்றுநோய் அதிகம் இல்லாத இந்தியா தானாக தலையெடுத்துவிடும்.

Categories: NEWS