Home > DISTRICT-NEWS, Namakkal > உரிமம் இல்லாத குளிர்பான நிறுவனங்கள்: நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்

உரிமம் இல்லாத குளிர்பான நிறுவனங்கள்: நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்

5,November, 2014

நாமக்கல் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் குளிர்பான நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும், அதுபோன்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து எருமப்பட்டியைச் சேர்ந்த தாமரைச்செல்வன், ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குளிர்பான நிறுவனங்கள் விவரம், உரிமம் பெற்று இயங்கும் குளிர்பான நிறுவனங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் உணவுப் பாதுகாப்பு துறையிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு உணவு பாதுகாப்பு துறையினர் அளித்த பதிலில், நாமக்கல் மாவட்டத்தில் 24 குளிர்பான நிறுவனங்கள் உள்ளதாகவும், அவற்றில் உரிமம் பெற்று 3 நிறுவனங்களும், மத்திய உரிமம் பெற்று ஒரு நிறுவனமும், பதிவுச் சான்று பெற்று 4 நிறுவனங்களும் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்மூலம், மீதமுள்ள 16 குளிர்பான நிறுவனங்கள் எந்தவித உரிமமோ, பதிவோ பெறாமல் செயல்பட்டு வருவது உறுதியாகிறது. மேலும், வேறு நிறுவன பாட்டில்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி, காலாவதி தேதி, உற்பத்தி தேதி ஏதுமின்றி விற்பனை செய்வதும், அது போன்ற குளிர்பான நிறுவனங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.எனவே, பொதுமக்களுக்கு தரமான குளிர்பானம் கிடைக்கச் செய்யவும், அவர்களின் உடல்நலனைப் பாதுகாக்கவும் நாமக்கல் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் இயங்கும் குளிர்பான நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories: DISTRICT-NEWS, Namakkal
  1. 5,November, 2014 at 11:23 am

    மக்களின் விழிப்புணர்வு பாராட்டுக்குரியது …..

  1. No trackbacks yet.
Comments are closed.