Home > NEWS > வணிகர்களை பாதிக்கும் உணவு பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்கோரி, இம்மாதம், 18ம் தேதி, டில்லியில் பேரணி

வணிகர்களை பாதிக்கும் உணவு பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்கோரி, இம்மாதம், 18ம் தேதி, டில்லியில் பேரணி

5,November, 2014

சென்னை: ‘சென்னையில், 24 மணி நேரமும் இயங்கும், டீக்கடைகளைத் திறந்து வைக்க, அரசு அனுமதிக்க வேண்டும்’ என, சென்னை பெருநகர தேநீர் கடை வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சென்னை பெருநகர தேநீர் கடை உரிமையாளர்கள் சங்க, 33ம் ஆண்டு விழா, சென்னை, காமராஜர் அரங்கில் நடந்தது. 2014 – 15ம் ஆண்டுக்கான தலைவராக ஆனந்தன், செயலராக சுந்தரம், பொருளாளராக தாமோதரன் மற்றும் துணைத்தலைவர், துணை செயலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆண்டு விழாவில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசுகையில், ”பால், சர்க்கரை விலையை அரசு அடுத்தடுத்து உயர்த்தி உள்ளது. சாதாரண மக்களை, டீக்கடைகாரர்களை பாதிக்கும் என்பதால், சர்க்கரை மீதான வரியை நீக்க வேண்டும். வணிகர்களை பாதிக்கும் உணவு பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்கோரி, இம்மாதம், 18ம் தேதி, டில்லியில் பேரணி நடக்கிறது. டீக்கடைகாரர்களும் பங்கேற்க வேண்டும்,” என்றார்.

ஆண்டுவிழாவில், நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்:

உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம், தற்காலத்திற்கு ஏற்ப இல்லை. லட்சக்கணக்கில் அபராதம், சிறைத்தண்டனை என்றெல்லாம் உள்ளது. விதிமுறைகளை மத்திய அரசு, திருத்தம் செய்ய வேண்டும்.

பெருநகரான சென்னை யில், இரவு நேரங்களிலும், பஸ், ரயில் போக்குவரத்து உள்ளது. மருத்துவமனை கள், ஐ.டி., நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள் தடையின்றி செயல்படுகின்றன.

இரவிலும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், 24 மணி நேரமும் டீக்கடைகளை திறக்க அரசு, காவல் துறை அனுமதிக்க வேண்டும்.

தொழில் வரி கட்டினால் தான் உரிமம் புதுப்பிக்க முடியும் எனக்கூறி, மாநகராட்சி அதிகாரிகள் திருப்பி அனுப்புகின்றனர். நிபந்தனையின்றி, எளிதாக கடைக்கான உரிமத்தை புதுப்பிக்க, மேயரும், ஆணையரும் வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

சங்கத் தலைவர் ஆனந்தன் கூறுகையில், ”தரமான பொருட்களை, நியாயமான விலையில் தர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். விலையை உயர்த்துங்கள் என, சங்கம் அறிவுறுத்துவது இல்லை. பால், சர்க்கரை விலை உயர்வால், டீ, காபி விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நிலைமைக்கேற்ப வியாபாரிகள் உயர்த்திக் கொள்வர்,” என்றார்.

Categories: NEWS