Home > NEWS > உணவு பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவில் திருத்தம் : வணிகர்கள் கோரிக்கையை ஏற்கிறது மத்திய அரசு

உணவு பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவில் திருத்தம் : வணிகர்கள் கோரிக்கையை ஏற்கிறது மத்திய அரசு

7,November, 2014

கடந்த அரசால் கொண்டு வரப்பட்டு, நிலுவையில் இருந்த, உணவு பாதுபாப்பு சட்டத்திருத்த மசோதாவை, மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. தேவையான திருத்தங்களுடன், புதிய திருத்த மசோதா கொண்டு வரப்பட உள்ளதால், வணிகர்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறும் என, தெரிகிறது. நுகர்வோருக்கு தரமான உணவுப் பொருட்கள் கிடைக்க வழி செய்யும் வகையில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் – 2006ஐ, மத்திய அரசு கொண்டு வந்தது. விதிமுறைகள் வகுக்கப்பட்டு, 2011ல் அமலுக்கு வந்தது.

இதில், ‘விதிமுறைகளை காலத்திற்கேற்ப திருத்த வேண்டும்’ என, நாடு முழுவதும் வணிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், உரிமம் புதுப்பித்தல், பதிவுக்கான அவகாசம், அடுத்த ஆண்டு, பிப்., 4 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், காங்., தலைமையிலான முந்தைய அரசு, பிப்ரவரியில் கொண்டு வந்த திருத்த மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த மசோதாவை திரும்பப்பெற, மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. புதிய திருத்தங்களுடன் சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க செயலர், வேல்சங்கர் கூறியதாவது:

உணவு பாதுகாப்பு சட்டத்தில், தேவைக்கேற்ப திருத்தம் செய்யும் வகையில், முந்தைய அரசு தாக்கல் செய்த, சட்டத்திருத்த மசோதாவை, மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

சிலர், சட்டத்தையே திரும்பப் பெற்றதாக, தவறான தகவல் பரப்பிவிட்டனர். மத்திய அரசு, வணிகர்கள், விவசாயிகள் விரும்பும் வகையில், திருத்தம் செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர், விக்கிரமராஜா கூறுகையில், ”சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற்றுள்ள மத்திய அரசு, புதிய திருத்தம் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. வணிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றும் வகையில், திருத்தம் அமைய வேண்டும்,” என்றார்.

Categories: NEWS